தஞ்சாவூர் அருகே 1000 சதுர மீட்டரில் கடல்தாழை நடவு பணி

4 hours ago 2

*கடல் பசுக்களை பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை

பேராவூரணி : கடல் பசுக்களை பாதுகாப்பதற்காக தஞ்சாவூர் அருகே வனத்துறை சார்பில் 1000 சதுர மீட்டர் பரப்பளவில் கடல் தாழை நடவு பணி தீவிதமாக நடந்து வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் முதல் புதுக்கோட்டை மாவட்டம் அம்மாப்பட்டினம் வரை உள்ள கடல் பகுதியை தமிழ்நாடு அரசு 2022ம் ஆண்டு கடல்பசு பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து அதற்கான மேம்பாட்டு பணிகளை செய்து வருகிறது. இந்த கடல் பகுதியில் அரியவகை கடல் பாலூட்டியான கடல் பசுக்களை பாதுகாக்கும் பணிகளை வனத்துறை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்ட வனஅலுவலர் ஆனந்தகுமார் உத்தரவின் பேரில் பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் சந்திரசேகரன், வனவர் சிவசங்கர், ஆகியோர் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள வல்லவன்பட்டினம் கிராம கடல் பகுதியில் ட்ரோன் மூலம் ஆய்வு செய்தனர். இதில் 10இடங்கள் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து படகில் கடலுக்குள் சென்று 1,000 சதுர மீட்டர் பரப்பளவில் கடல் தாழைகள் நடவு செய்து வளர்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடைப்பட்ட கடல்பகுதி 11 மீட்டர் ஆழம் வரை உள்ளதால் இந்த பகுதியில் அரியவகை கடல்வாழ் உயிரினமான கடல் பசுக்கள் அதிகமாக காணப்படுகின்றன. இவைகள் ஒரு நாளைக்கு 40 முதல் 45 கிலோ வரை கடல் தாழைகளை உணவாக உட்கொள்கின்றன. கடலுக்குள் மீனவர்கள் மூலம் வேலி அமைக்கப்பட்டு எளிதில் மக்கக்கூடிய சணல் மற்றும் தென்னங்கயிறுகள் ஒரு சதுர மீட்டர் அளவிலான மூங்கில் சட்டங்களில் பின்னப்படுகின்றன.

இதில் அவற்றில் கரும்புத்தாழை, அருகுத்தாழை, ஊசித்தாழை ஆகிய கடல் தாழைகளின் தரையடி தண்டுகள் சதுர மீட்டருக்கு 52 வீதம் கட்டப்பட்டு பின்னர் கடலுக்கு அடியில் மீனவர்கள் நவீன பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து சென்று நடவு பணி நடந்து வருகிறது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், கடல்தாழைகளின் வளர்ச்சி கடல் உயிரின ஆராய்ச்சியாளர்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

1000 சதுர மீட்டர் பரப்பளவில் வளர்க்கப்படும் கடல் தாழைகள் அடுத்த ஆண்டுகளில் ஐந்து முதல் பத்து மடங்கு வளர்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் இறால், நண்டு, மீன் போன்ற கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கும், பல்லுயிர் பெருக்கத்திற்கும் கடல்தாழைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றனர்.

The post தஞ்சாவூர் அருகே 1000 சதுர மீட்டரில் கடல்தாழை நடவு பணி appeared first on Dinakaran.

Read Entire Article