தஞ்சாவூர்: தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் குளிர்சாதன பெட்டி வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே 1876ம் ஆண்டு ராசா மிராசுதாரர் அரசு மருத்துவமனை கட்டப்பட்டது. இந்த மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான சிகிச்சை மட்டுமே அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த மருத்துவமனை திருச்சி, தஞ்சை, அரியலூர், புதுகை, திருவாரூர், நாகை மக்களின் நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஒரு நாளுக்கு 100க்கும் மேற்பட்டோர் இங்கு சிகிச்சைக்காக வருகின்றனர்.
இந்நிலையில், இந்த மருத்துவமனையில் முதல் தளத்தில் உள்ள மகப்பேறு வார்டில் குளிர்சாதன பெட்டி வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இதனை கவனித்த அதிகாரிகள் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்த கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகளுடன் இருந்த தாய்மார்கள் என 50க்கும் மேற்பட்டோர் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். அவர்கள் மருத்துவமனைக்கு அருகில் உள்ள கட்டிடத்திற்கு மாற்றப்பட்டனர். இந்த தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுப்படுத்தினர். இதையடுத்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் நேரில் வந்து ஆய்வு செய்தனர்.
The post தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் தீ விபத்து: பத்திரமாக வெளியேற்றப்பட்ட நோயாளிகள்! appeared first on Dinakaran.