தஞ்சாவூர், அக். 2: மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தஞ்சாவூர் மத்திய மக்கள் தொடர்பு அலுவலகம், தூய்மையே சேவை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தஞ்சாவூர் அரசு தொழில் பயிற்சி நிலைய நாட்டு நலப்பணி திட்டத்துடன் இணைந்து, பயிற்சி நிலைய வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மத்திய மக்கள் தொடர்பு அலுவலகத்தின் கள விளம்பர உதவியாளர் ரவிந்திரன் பேசுகையில், தூய்மையை நோக்கி நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நமது நாட்டை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றும். அதற்கு மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அவசியம் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இந்நிகழ்ச்சியை முன்னிட்டு தூய்மையே சேவை குறித்த உறுதிமொழி எடுக்கப்பட்டது. மேலும் அரசு திட்டங்கள் குறித்த விளக்க பிரசுரங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களின் ஒத்துழைப்போடு அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் அரசு தொழில் பயிற்சி நிலைய துணை இயக்குனர் மற்றும் முதல்வர் இஸ்மத் பானு, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ராஜன், பயிற்சி அலுவலர்கள் வெங்கடேசன், சிவராமகிருஷ்ணன், உதவி பயிற்சி அலுவலர்கள் த வெங்கடேஷ் பாபு, செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர், அக். 2: கும்பகோணம் உள்ளிட்ட 4 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் 4800 மெ.டன் உளுந்து கொள்முதல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிச.23ம் தேதி வரை 90 நாள் கொள்முதல் நடக்கிறது. இதை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளலாம் என்று தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வேளாண் உற்பத்தியை பெருக்கி, விவசாயப் பெருமக்களின் வருமானத்தினை உயர்த்துவதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு சீரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நடப்பு 2024-25 ம் ஆண்டு காரிஃப் பருவத்தில் பயறு வகைகள் சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனைப் பாதுகாத்திடும் நோக்கத்தில், ஒன்றிய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலையில் உளுந்து கொள்முதல் செய்வதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
நடப்பு 2024-25ம் ஆண்டு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறைக்குட்பட்ட தஞ்சாவூர் விற்பனைக்குழுவின் கட்டுபாட்டில் இயங்கி வரும் தஞ்சாவூர். கும்கோணம், பாபநாசம் மற்றும் ஒரத்தநாடு ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலமாக உளுந்து 4800 மெ.டன் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உளுந்து விளைப்பொருளுக்கு நிர்ணயிக்கப்பட்ட சராசரி தரத்தில் இருக்கும் வண்ணம் நன்கு சுத்தம் செய்து, ஈரப்பதம் 12 சவீதத்திற்குள் இருக்குமாறு நன்கு உலர வைத்து, அயல் பொருட்கள் கலப்பின்றி கொண்டு வர விவசாயிகளை கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு நன்கு உலர வைக்கப்பட்ட தரமான உளுந்து கிலோ ஒன்றிற்கு ரூ.74 வீதத்தில் கொள்முதல் செய்யப்படும் உளுந்து விளைப்பொருளுக்கான கிரயத்தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 25.09.2024 முதல் 23.12.2024 முடிய 90 நாட்களுக்கு உளுந்து கொள்முதல் செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களது சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களுடன் தஞ்சாவூர், கும்பகோணம், பாபநாசம் மற்றும் ஒரத்தநாடு ஆகிய ஒழுங்குமுறை விற்பனைககூடங்களை அணுகி பதிவு செய்து தங்களது உளுந்தை விற்பனை செய்து பயனடையலாம்.
பயறு வகைகளை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நல்ல லாபகரமான விலை கிடைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள இத்திட்டத்தினை விவசாய பெருமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
The post தஞ்சாவூர் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் தூய்மையே சேவை விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.