
சென்னை,
தமிழ்நாடு சட்டசபையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது, சட்டமன்ற உறுப்பினர் சிதம்பரம் கே.ஏ.பாண்டியன், சிதம்பரம் பழைய கொள்ளிடம் ஆற்று பகுதியில் முதலை பண்ணை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் பொன்முடி, தமிழ்நாட்டில் 3 இடங்களில் முதலை பண்ணைகள் உள்ளது. கோடை காலத்தில் ஆழமான பகுதிகளில் சென்று தங்கி விடுகிறது. அணைக்கரை பகுதிகளில் முதலை பிடிக்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. முதலையால் பாதிக்கப்பட்ட 2 பேருக்கு 25 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் பகுதியில் முதலை பண்ணை அமைக்கப்பட உள்ளது. அதற்கு அருகில் தான் சிதம்பரம் பகுதி உள்ளதால் முதலை பண்ணை அமைக்க வாய்ப்பில்லை என்று பதில் அளித்தார்.
வனப்பகுதியில் சாலை அமைக்க ரூ.250 கோடி ஒதுக்கீடு:-
கேள்வி நேரத்தின்போது சிதம்பரம் பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. மீனவ கிராமங்களில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் சாலைகளை ஏற்படுத்த வனத்துறை அனுமதி வேண்டும் என்று சிதம்பரம் கே.ஏ.பாண்டியன், கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் பொன்முடி, வனத்துறைக்கு சொந்தமான பழுதடைந்த சாலைகளை சீரமைக்க 500 எக்டேருக்கு 250 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் புதிய சாலைகள் அமைப்பது மற்றும் பழைய சாலைகள் சீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும். எனவே, வனத்துறை நிலங்களில் புதிய சாலை அமைப்பது குறித்து மனு அளித்தால் பரிசீலனை செய்து புதிய சாலைகள் அமைத்து தரப்படும் என்று பதில் அளித்தார்.