தங்கையிடம் தவறாக நடக்க முயற்சி நண்பனை அடித்துக் கொலை செய்து வீட்டின் முன் புதைத்த மீனவர் கைது

2 weeks ago 6

ராமேஸ்வரம்: தங்கையிடம் தவறாக நடக்க முயன்ற நண்பனை கொலை செய்து வீட்டு முன் புதைத்த மீனவர் கைதானார். ராமேஸ்வரம் பெரிய பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் நம்புராஜன் (47). இவர் கடந்த மார்ச் 30ம் தேதி முதல் காணாமல் போனார். இதுபற்றி அவரது அக்கா ராணி, ராமேஸ்வரம் துறைமுக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் நம்புராஜன் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் போலீசாருக்கு நேற்று கிடைத்தது.

அதன் அடிப்படையில் ராமேஸ்வரம் துறைமுகம் மற்றும் நகர் காவல் நிலைய தனிப்பிரிவு போலீசார், ராமேஸ்வரம் வெண்மணி நகரை சேர்ந்த நம்புராஜனின் நண்பர் வெங்கட சுப்ரமணியன் (47) என்பவரை பிடித்து விசாரித்தனர். இதில், நம்புராஜன் மற்றும் வெங்கட சுப்ரமணியன் இருவரும் ஒரே படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றதில் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். தினமும் இருவரும் மது அருந்துவதையும் வழக்கமாக வைத்துள்ளனர். கடந்த மார்ச் 30ம் தேதி வெங்கட சுப்ரமணியன் வீட்டில் இருந்த, மனவளர்ச்சி குன்றிய அவரது 45 வயது தங்கையிடம், நம்புராஜன் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனை பார்த்த வெங்கட சுப்ரமணியன் கோபத்தில், நம்புராஜனை அடித்து கொலை செய்துள்ளார். பின்னர் உடலை வீட்டின் முன்பு புதைத்துள்ளது தெரியவந்தது.

இதுபற்றி வெங்கட சுப்ரமணியன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், போலீசார் கொலை வழக்குப்பதிந்து அவரை நேற்று கைது செய்தனர். இதனை தொடர்ந்து துறைமுகம் மற்றும் நகர் போலீசார், வெண்மணி நகரில் உள்ள வெங்கட சுப்ரமணியன் வீட்டிற்கு நேற்று மாலை சென்று ஆய்வு செய்தனர். அப்போது நம்புராஜனின் உறவினர்கள், டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு, புதைக்கப்பட்ட உடலை விரைந்து தோண்டி எடுக்காவிட்டால் நாங்களே தோண்டி எடுப்போம் என ஆத்திரத்துடன் கோஷமிட்டனர். இதனால் போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து இன்று காலை உடலை அதிகாரிகள் முன்னிலையில் தோண்டி எடுக்க உள்ளனர்.

The post தங்கையிடம் தவறாக நடக்க முயற்சி நண்பனை அடித்துக் கொலை செய்து வீட்டின் முன் புதைத்த மீனவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article