
சென்னை,
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பல்வேறு திரைமறைவு நெருக்கடிகளுக்கு பின்னாலும், அரசியல் இடைத் தரகர்களின் தீவிர பேரங்களுக்குப் பிறகும், பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்திருக்கிறது. இந்த கூட்டணியை அமைப்பதற்காக உள்துறை மந்திரி அமித்ஷா தனி விமானம் மூலம் சென்னைக்கு வந்து பத்திரிகையாளர் சந்திப்பில் கூட்டணியை அறிவித்திருக்கிறார்.
பலமுறை தள்ளி வைக்கப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பு மாலை 3 மணிக்குத் தான் நடைபெற்றது. அதற்கு முன்பு பத்திரிகையாளர் சந்திப்பு மேடைக்கு பின்புறம் வைக்கப்பட்ட பேனர் மூன்று முறை மாற்றப்பட்டது. முதலில் தேசிய ஜனநாயக கூட்டணி என்றும், பிறகு தமிழக பா.ஜ.க. கூட்டம் என்றும், இறுதியாக தேசிய ஜனநாயக கூட்டணி என்றும் மாற்றப்பட்டு மிகுந்த குழப்பத்திற்கிடையே அமித்ஷா நடுநாயகமாக அமர்த்தப்பட்டு ஒருபக்கம் எடப்பாடி பழனிசாமி, இன்னொரு பக்கம் அண்ணாமலை அமர்ந்திருக்க கூட்டணியை அமித்ஷா அறிவித்தார்.
பத்திரிகையாளர் சந்திப்பில் கூட்டணி குறித்து அமித்ஷா அறிவித்தாரே தவிர, வேறு எந்த விவரமும் வெளியிடாமலும், எடப்பாடி பழனிசாமிக்கு பேசுவதற்கு கூட வாய்ப்பு தரப்படாமலும், அப்படி பேசினால் பத்திரிகையாளர்களின் நெருக்கடியான கேள்விகளை எதிர்கொள்ள முடியாது என்ற நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பிலிருந்து அமித்ஷா வேகமாக வெளியேறினார்.
பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி முரண்பாடுகளின் மொத்த வடிவமாக இருப்பதை அனைவரும் அறிவார்கள். கடந்த காலங்களில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க.வுக்கு எதிராகவும், அதன் முன்னணி தலைவர்களுக்கு எதிராகவும் தொடுத்த தாக்குதல்கள், கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள் பல பேட்டிகளின் வாயிலாக தொலைக்காட்சிகள் மூலம் ஆதாரத்துடன் வெளிவந்தது தமிழக அரசியல் களத்தில் இனி தீவிரமாக பேசப்படுகிற வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே, அ.தி.மு.க.வில் அமைச்சராக இருந்து பா.ஜ.க.வில் சேர்ந்த நயினார் நாகேந்திரன் புதிய பா.ஜ.க. தலைவராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். கடந்த மூன்றாண்டுகளாக, அண்ணாமலையின் திராவிட இயக்க எதிர்ப்பு, குறிப்பாக, அ.தி.மு.க.வுக்கு எதிராக பேசிய அண்ணாமலை இனி தொடர்ந்து அதே குற்றச்சாட்டுகளை கூறுவாரா ?
பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி அப்பட்டமான ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி. ஒரு கொள்கையற்ற கூட்டணி என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன. பா.ஜ.க.வின் செயல் திட்டங்களில் பலவற்றை அ.தி.மு.க. ஏற்கப் போகிறதா ? இல்லையா என்பதை தெளிவுபடுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க. அரசின் நீட் தேர்வு திணிப்பு, மும்மொழி திட்டம் திணிப்பு, புதிய கல்விக் கொள்கை மூலமாக இந்தியை திணிக்கும் பி.எம்.ஸ்ரீ. பள்ளிகளை திறப்பது, மக்களவை தொகுதி சீரமைப்பில் தமிழகம் எதிர்கொள்ள இருக்கும் பாதிப்பு, நிதிப் பகிர்வில் தமிழகம் புறக்கணிப்பு, வெள்ள நிவாரண நிதியில் பழிவாங்கும் போக்கு, மும்மொழித் திட்டத்தை ஏற்காததால் சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்திற்கு ரூபாய் 2132 கோடி வழங்காததால் 8 மாதங்களாக ஊதியம் தர முடியாத நெருக்கடி, இதனால் 40 லட்சம் மாணவர்கள் பாதிப்பு, ஒரே நாடு ஒரே மொழி, ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே கலாச்சாரம், சிறுபான்மையின மக்களின் சொத்துகளை பறிக்கும் வக்பு சட்டத் திருத்தம், சிறுபான்மையின மக்களின் உரிமைகளை பறிக்கும் குடியுரிமை சட்ட திருத்தம், 100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி மறுப்பு, 10 ஆண்டுகாலமாக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணாத நிலை என தமிழக விரோத பா.ஜ.க. அரசின் பட்டியலை அடுக்கிக் கொண்டே போகலாம். இதற்கெல்லாம் தெளிவான விளக்கத்தை வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் இன்றைக்கு எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டுள்ளது. அப்படி அவர் விளக்கம் அளிக்கவில்லையெனில், பா.ஜ.க. - அ.தி.மு.க. சந்தர்ப்பவாத தமிழக விரோத கூட்டணிக்கு 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் உரிய பாடத்தை புகட்டுவார்கள்.
இந்தியா கூட்டணி என்பது தமிழக நலன் சார்ந்த கொள்கை கூட்டணி. இந்தியா கூட்டணி கட்டுக்கோப்பாக ஒருமித்த குரலில் செயல்பட்டு வருகிறது. எனவே, 2026 சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறுவது உறுதியாகும். அதேநேரத்தில், அரசியல் சுயநலத்தின் அடிப்படையில் வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை போன்றவற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அ.தி.மு.க., இன்றைக்கு பா.ஜ.க.விடம் சரணடைந்து அமைத்திருக்கிற சந்தர்ப்பவாத கூட்டணியை 2026 சட்டமன்றத் தேர்தலில், மக்கள் படுதோல்வியடையச் செய்து நிச்சயம் உரிய பாடத்தை புகட்டுவார்கள். என தெரிவித்துள்ளார்