
சென்னை,
பா ரஞ்சித் இயக்கியிருக்கும் தங்கலான் படத்தில் விக்ரம், பார்வதி திருவொத்து, மாளவிகா மோகனன், பசுபதி டேனியல் கேல்டகிரோன், ஆனந்த் சாமி, ஹரி கிருஷ்ணன், உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
இப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.பா.ரஞ்சித்துடன் இணைந்து ஜி.வி.பிரகாஷ் பணியாற்றுவது இதுவே முதல் முறையாகும். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஆனாலும் வசூல்ரீதியாக சிறப்பாக அமையவில்லை.

இதற்கிடையில், நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளம் தங்கலான் படத்தின் ஓ.டி.டி உரிமையை பெற்றது. இப்படம் கடந்த செப்டம்பர் 20-ம் தேதியே ஓடிடியில் வெளியாகும் என்ற கூறப்பட்டது. ஆனால் இந்தப் படம் திரையரங்குகளில் எதிர்பார்த்தபடி வசூலிக்கவில்லை மற்றும் சர்ச்சைக்குரிய காட்சிகள் உள்ளிட்டவற்றை காரணம் காட்டி நெட்பிளிக்ஸ் நிறுவனம் தொகையை குறைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து தயாரிப்பாளருக்கும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எடுக்கப்படவில்லை.
தொடர்ந்து தாமதம் ஏற்பட்டதால், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தங்கலான் படம் வெளியாகாது என்று கூறப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் படம் அடுத்த மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.