சென்னை: தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்து பவுன் ரூ.71 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை கண்டது. ஜெட் வேக விலை உயர்வால் நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தங்கம் விலை கடந்த 9ம் தேதியில் இருந்து அதிரடியாக உயர்ந்து வருவதை பார்க்க முடிந்தது. இதன் ஒரு பகுதியாக கடந்த 12ம் தேதி ஒரு பவுன் ரூ.70,160க்கு விற்பனையானது. இந்த விலை என்பது இதுவரை இல்லாத வரலாற்று உச்சமாக பார்க்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தங்கம் விலை சற்று குறைந்தது. அதாவது கடந்த 14ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 குறைந்து ஒரு பவுன் ரூ.70,040க்கும், 15ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 குறைந்து ஒரு பவுன் ரூ.69,760க்கும் விற்பனையானது.
தங்கம் விலை மீண்டும் பவுன் தங்கம் ரூ.70 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. இந்த விலை குறைவு என்பது 2 நாட்கள் நீடித்தது. நேற்று முன்தினம் மீண்டும் தங்கம் விலை உயர்ந்தது. நேற்று முன்தினம் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.760 உயர்ந்து ஒரு பவுன் ரூ.70,520 என்ற புதிய உச்சத்தை பதிவு செய்தது. இந்த அதிர்ச்சியை தாங்குவதற்குள் நேற்று மீண்டும் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்தது. அதாவது தங்கம் விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,920க்கும், பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ஒரு பவுன் ரூ.71,360க்கும் விற்பனையானது. இதன் மூலம் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை மீண்டும் பதிவு செய்தது. இந்த கிடு, கிடு விலை உயர்வு நகை வாங்குவோரை கலக்கமடைய செய்துள்ளது. அதே நேரத்தில் வெள்ளி விலையில் ஏந்த வித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.110க்கும், பார் வெள்ளி 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.
The post தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது பவுன் ரூ.71 ஆயிரத்தை தாண்டி விற்பனை appeared first on Dinakaran.