தங்கக்குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் அழகர்: 10 லட்சம் பக்தர்கள் திரண்டு தரிசனம்

4 hours ago 3

மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி அழகர் நேற்று வைகை ஆற்றில் இறங்கினார். 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர். மதுரை சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்வாக வைகை ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. முன்னதாக அழகர்கோவிலில் இருந்து அழகர், கள்ளழகர் வேடம் பூண்டு, கடந்த 10ம் தேதி தங்கப்பல்லக்கில் மதுரை புறப்பட்டார். நேற்று முன்தினம் காலை மூன்றுமாவடி வந்தார். அங்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அவரை எதிர்கொண்டு அழைத்து வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது.

தொடர்ந்து புதூர், ரேஸ்கோர்ஸ் காலனி, ரிசர்வ் லைன், தல்லாகுளம் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அழகர் காட்சி அளித்தார். பின்னர் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலுக்கு நேற்று முன்தினம் இரவு வந்தார். அங்கு நள்ளிரவு 11.30 மணியளவில் திருமஞ்சனமாகி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். அப்போது, ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அழகருக்கு அணிவிக்கப்பட்டது. கள்ளழகர் வேடம் அணிந்த பக்தர்கள் விடிய, விடிய அழகரை வர்ணனை செய்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

தீப்பந்தம் ஏந்தியும், தோப்ரா பைகளில் தண்ணீரை நிரப்பி, சூடம் ஏற்றி பய பக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். நேற்று அதிகாலை 2.30 மணிக்கு மேல் அழகர், தல்லாகுளம் கருப்பணசாமி கோயிலில் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். அவருக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. அதிகாலை 3 மணி அளவில் தங்கக்குதிரையில் அமர்ந்தபடி, ஆயிரம் பொன் சப்பரத்தில் வைகை ஆற்றுக்கு புறப்பட்டார். அழகர் ஆற்றில் இறங்குவதையொட்டி வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்ததால் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

தல்லாகுளத்தில் இருந்து பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்தபடி ஆழ்வார்புரம் பகுதிக்கு வந்த அழகரை வரவேற்க அதிகாலை 4 மணிக்கு வீரராகவப்பெருமாள் வைகை ஆற்றுக்கு வந்து மண்டகப்படியில் காத்திருந்தார். அவர், தங்கக்குதிரையில் வந்த அழகரை வரவேற்று 3 முறை வலம் வந்தார். வைகை ஆற்றில் அழகர் இறங்குவதைக் காண ஆற்றின் அனைத்து பகுதிகளிலும் பக்தர்கள் வெள்ளமென கூடி இருந்தனர். திரும்பிய பக்கமெல்லாம் பக்தர்களின் தலைகளே தென்பட்டன. விவசாயம், வளமை செழிக்க, நிலைக்க தங்கக்குதிரை வாகனத்தில் அழகர் பச்சைப்பட்டு உடுத்தி, மதுரை வைகை ஆற்றில் காலை 6.02 மணிக்கு இறங்கினார்.

அப்போது அங்கு கூடி இருந்த 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ‘கோவிந்தா… கோவிந்தா…’ என்று எழுப்பிய கோஷம் விண்ணை முட்டியது. பக்தர்கள் சர்க்கரை நிரப்பிய செம்புகளில் தீபம் ஏற்றி அழகருக்கு தீபாராதனை காட்டி வழிபட்டனர். வைகை ஆற்றில் இறங்கிய அழகர் அங்கு அமைக்கப்பட்டிருந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் அங்கிருந்து காலை 7.41 மணிக்கு புறப்பட்டு ராமராயர் மண்டபம் வந்தார். காலை 11 மணி அளவில் ராமராயர் மண்டபத்தில் அழகர் வேடம் அணிந்த பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து குளிர்விக்கும் தீர்த்தவாரி நடைபெற்றது. இரவு 9 மணி அளவில் வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலில் அழகர் எழுந்தருளினார்.
அமைச்சர்கள் சேகர்பாபு, பி.மூர்த்தி, ஐகோர்ட் நீதிபதிகள் பி.புகழேந்தி, வேல்முருகன், தனபால், வடமலை, கலெக்டர் சங்கீதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அழகர் வைகை ஆற்றில் இறங்கிய வைபவத்தையொட்டி போலீஸ் கமிஷனர் லோகநாதன் தலைமையில், 10 எஸ்பிக்கள் மற்றும் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அழகர் இறங்கும் வைகையாற்று பகுதியில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அழகர் ஆற்றில் இறங்கும் முன்பு அழகர்கோவில் தக்கார் வெங்கடாச்சலம் சார்பில் நாணயங்கள் பொறித்த பூ மாலை அழகருக்கு அணிவிக்கப்பட்டது. மூன்று குதிரைகளில் குதிரைப்படை போலீசார் வலம் வந்து கூட்டத்தை கண்காணித்தனர். வைகையாற்றுக்குள் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பக்தர்களுக்கு தனி வழி ஏற்படுத்தப்பட்டிருந்தது. இதனால் நெரிசலின்றி பக்தர்கள் சென்று வர முடிந்தது.

* மண்டூக முனிவருக்கு இன்று சாப விமோசனம்
இன்று காலை 6 மணிக்கு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலில், அழகர் திருமஞ்சனமாகி ஏகாந்த சேவையில் உலா வருகிறார். காலை 9 மணிக்கு சேஷ வாகனத்தில் சென்று, காலை 11 மணிக்கு தேனூர் மண்டபத்தை அடைகிறார். பிற்பகல் 2 மணிக்கு கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கிறார். பிற்பகல் 3.30 மணிக்கு அனுமார் கோயிலுக்கு வருகிறார். அங்கு அங்கப்பிரதட்சணம் நடக்கிறது.

* விடிய விடிய தசாவதாரம்
அழகர் இன்று இரவு ராமராயர் மண்டபத்திற்கு வருகிறார். அங்கு 11 மணிக்கு திருமஞ்சனமாகி விடிய, விடிய தசாவதார நிகழ்ச்சி நடக்கிறது. 14ம் தேதி காலை 6 மணிக்கு மோகனாவதாரத்தில் வீதி உலா வருகிறார். பகல் 2 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்தில் எழுந்தருளுகிறார். 15ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு மதுரை தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனமாகி பூப்பல்லக்கில் எழுந்தருளுகிறார். அதே திருக்கோலத்தில் கருப்பணசாமி கோயிலில் இருந்து மலைக்கு புறப்படுகிறார். மூன்றுமாவடி, அப்பன் திருப்பதி, கள்ளந்திரி வழியாக 16ம் தேதி காலை 10 மணிக்கு மேல் 10.25 மணிக்குள் இருப்பிடம் அடைகிறார். 17ம் தேதி உற்சவ சாந்தியுடன் சித்திரை திருவிழா நிறைவடைகிறது.

* ஓய்வு ரயில்வே அதிகாரி உட்பட 2 பேர் உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து முத்தையா நகரைச் சேர்ந்தவர் பூமிநாதன் (65). ஓய்வு ரயில்வே பொறியாளர். நேற்று அதிகாலை தனது குடும்பத்துடன் சித்திரை திருவிழாவில் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை காண விஐபி பாஸ் பெற்று ஆழ்வார்புரம் வைகை ஆற்றுப்பகுதியில் குடும்பத்துடன் அமர்ந்து இருந்தார். அதிகாலை 4 மணியளவில் திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மயக்கமடைந்தார். அருகில் இருந்த 108 ஆம்புலன்ஸ் உதவியாளர்கள் முதலுதவி செய்து மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதேபோல் வைகை பால பகுதியில் பெண்கள் கல்லூரி எதிரே திருவிழாவை காண வந்திருந்த கண்ணன் (46) என்பவர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தார். மதுரை, செல்லூரை சேர்ந்த சந்தோஷ் (18), தல்லாகுளம் பகுதியில் கூட்ட நெரிசலில் சிக்கினார். மண்டக படியில் இருந்த மின் வயரை பிடித்து இழுத்ததில் மின்சாரம் தாக்கி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

The post தங்கக்குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் அழகர்: 10 லட்சம் பக்தர்கள் திரண்டு தரிசனம் appeared first on Dinakaran.

Read Entire Article