கோவை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 5, 6ம் தேதியில் கோவையில் நடக்கும் விழாக்களில் பங்கேற்கவுள்ளார். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தங்க நகை தொழில் தொடர்பாக தொழில் பூங்கா (‘கிளஸ்டர்’) அமைக்க ஆலோசனை நடக்கவுள்ளது. இந்தியாவில் தங்க நகை தொழிலில் முதன்மை பகுதியாக கோவை நகரம் இருக்கிறது. தங்க நகை ஏற்றுமதி, தங்க கட்டி இறக்குமதி, தங்க நகைகள் வடிவமைப்பில் கோவை தான் இந்தியாவின் ‘டாப் சிட்டி’யாக இருக்கிறது. பல்வேறு வடமாநிலங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட முக்கிய தங்க நகை உற்பத்தியாளர்கள் கோவையில்தான் தொழில் செய்து வருகின்றனர்.
வெளி மாநிலங்களுக்கான ஆர்டர்களிலும் கோவைதான் முக்கிய இடம் பிடித்துள்ளது. ஆட்டோ மொபைல், பம்பு மோட்டார், கிரைண்டர், ஜவுளி தொழிலை காட்டிலும் அதிக வருவாய் கொட்டி தருவது கோவையின் நகை பிசினஸ்தான். நீண்ட காலமாக தங்க நகை தொழில் கட்டமைப்புக்கான திட்டம் தேவை என ஜூவல்லரி சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இந்த தொழிலில் நேரடியாக மறைமுகமாக சுமார் 2 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். 50க்கும் மேற்பட்ட பகுதிகளில் தங்க நகை பட்டறைகள் இருக்கின்றன.
கோவையில் தங்க நகை தொழிலை தமிழ்நாட்டின் முக்கிய அடையாள தொழிலாக மாற்றும் நோக்கத்தில் ‘கிளஸ்டர்’ உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. தங்க நகை தயாரிப்பாளர் சங்கம், வியாபாரிகள் சங்கம், தங்க கட்டி விற்பனையாளர் சங்கம், பரம்பரை விஸ்வகர்ம தங்க நகை வியாபாரிகள் சங்கம், கோல்டு ஸ்மித் ஒர்க்கர் சங்கம், மேற்கு வங்க வியாபாரிகள் சங்கம் என பல்வேறு சங்கத்தினர் முதல்வரின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை நகரில் மட்டும் ஆண்டிற்கு சுமார் 78 ஆயிரம் கோடி ரூபாய்க்கு தங்க நகை வர்த்தகம் நடப்பதாக தெரியவந்துள்ளது. ‘கிளஸ்டர்’ ஏற்படுத்தப்பட்டால் இந்த வர்த்தகம் மேலும் அதிகமாகும் வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக கோவை மாவட்ட தங்க நகை தயாரிப்பாளர் சங்க தலைவர் முத்து வெங்கட்ராமன் கூறியதாவது: தங்க நகை வர்த்தகத்தினரின் நீண்ட கால கனவுதான் தொழிற் பூங்கா திட்டம். தமிழ்நாடு முதல்வர் இதை நிறைவேற்றுவார் என நம்பிக்கையுடன் இருக்கிறோம்.
ஒரே கூரையின் கீழ் தங்க நகை தொழிைல கொண்டு வர இந்த திட்டம் உதவிகரமாக இருக்கும். நாங்கள் சிறு குறு நடுத்தர தொழில் துறை (எம்எஸ்எம்இ) கீழ் ஒருங்கிணைந்து அவர்களின் நேரடி பார்வையில் செயல்பட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்து இருக்கிறோம். ஒரே இடத்தில் சன்ன கம்பி கடை, பாலீஷ், ஸ்டோன் கடை, தங்க கட்டி வியாபாரம் போன்றவை நடக்கும்போது மக்கள் நம்பிக்கையுடன் வருவார்கள். வெளிநாட்டில் இருந்து அதிக ஆர்டர்கள் வரும். தனித்தனியாக எதாவது ஒரு இடத்தில் இருக்கும்போது தனி நபரை நம்ப மாட்டார்கள்.
அரசின் நேரடி கட்டுப்பாட்டில் தொழில் நடக்கும்போது நம்பிக்கையும், தொழிலும் சிறப்பாக இருக்கும். இதற்கு அரசு சார்பில் நகரில் நகை தொழில் நடக்கும் வட்டாரத்தில் உரிய இடம் ஒதுக்கி கட்டமைப்புகளை அரசு ஏற்படுத்தி தரவேண்டும் என எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இப்போது ஆண்டிற்கு சுமார் 100 டன் அளவிற்கு தங்க நகை வர்த்தகம் நடக்கிறது. இது படிப்படியாக அதிகரிக்கும். அதிக தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். தொழிலாளர்களுக்கு திறன் சார்ந்த பயிற்சியும் இந்த தொழில் பூங்காவில் வழங்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
The post ‘தங்க நகை தொழிற் பூங்கா’ கோவையில் துவங்க திட்டம்; ஆண்டுக்கு ரூ.78,000 கோடி வர்த்தகம்: முதல்வர் தலைமையில் முக்கிய ஆலோசனை appeared first on Dinakaran.