சென்னை: தங்க நகை அடமானம் தொடர்பான விதிமுறைகள் சாமானியர்களின் தலையில் இடியை இறக்கியிருக்கிறது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்; தங்க நகை அடமானம் வைப்பதில் பல புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்து சாமானியர்களின் தலையில் இடியை இறக்கி இருக்கிறது ரிசர்வ் வங்கி. ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களே பெரும்பாலும் தங்களது அவசர தேவைகளுக்கு தங்க நகைக் கடன் போன்றவற்றைச் சார்ந்திருக்கும் சூழலில் அதன் மீது மத்திய ரிசர்வ் வங்கி விதித்திருக்கும் புதிய விதிமுறைகள் சாமானிய மக்களை பாதிக்கும் செயலாக அமைந்துள்ளது.
குறிப்பாக நகையின் மதிப்பில் முன்பை விட 5% குறைத்து, 75% தான் கடன் வழங்கப்படும் என்ற புதிய விதிமுறை அவசர தேவைக்காக வங்கிகளை நாடிவரும் மக்களை நேரடியாகப் பாதிக்கும் முடிவாகும். அவசரம் என்று வரும் மக்களை அத்தியாவசியமற்ற விவரங்களையும், ஆதாரங்களையும் கேட்டு அலைக்கழிக்கும் இந்த புதிய நடைமுறையை மத்திய ரிசர்வ் வங்கி உடனடியாக கைவிட வேண்டும். அடமானம் வைத்த நகையை முழுவதுமாக மீட்ட பிறகே மீண்டும் அந்த நகையை அடமானம் வைக்க முடியும் என்ற புதிய விதிமுறையைக் கடந்த மாதம் RBI கொண்டு வந்த அதிர்ச்சியிலிருந்து.
மக்கள் இன்னும் மீளாத நிலையில், தற்போது மேலும் புதிய 9 விதிமுறைகள் என்ற பெயரில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது, நேரடியாக ஏழை எளிய மக்களைப் பாதிக்கும் செயலாகும். RBI உடனே இத்தகைய கட்டுப்பாடுகளைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
The post தங்க நகை அடமானம் தொடர்பான விதிமுறைகள் சாமானியர்களின் தலையில் இடியை இறக்கியிருக்கிறது: அமைச்சர் தங்கம் தென்னரசு appeared first on Dinakaran.