தங்க அம்பாரி

3 months ago 23

உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. இவ்விழாவில் இறுதிநாளான விஜயதசமி அன்று யானை மீது தங்க அம்பாரி ஏற்றி ஊர்வலம் நடத்தப்படும். இந்த தங்க அம்பாரிக்கு 700 ஆண்டுகால வரலாறு உள்ளது. மைசூரு மன்னரின் பரம்பரை சின்னமாக கருதப்படுவது தங்க அம்பாரி. தங்கம், வைரம், வெள்ளி, ரத்தினம், மாணிக்கம், யானைத் தந்தம், சந்தனக் கட்டை மற்றும் மதிப்பு மிக்க பொருட்கள் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது.

சுமார் 400 கிலோ எடை கொண்ட தங்க சிம்மாசனத்தை மைசூரு மாகாணத்தை ஆட்சி செய்த மன்னர்கள் பயன்படுத்தி வந்தனர். நவராத்திரி விழா நாட்களில் இந்த தங்க அம்பாரியில் அமர்ந்து மன்னர்கள் தர்பார் நடத்தி வந்தனர். அப்போது மன்னர் அரசாட்சியின் கீழ் உள்ள பகுதியில் இருந்துவரும் மக்களுக்கு மன்னர்கள் பொன், பொருளை தானமாக வழங்கியுள்ளனர். விஜயதசமி நாளில் யானை மீது தங்க அம்பாரி பொருத்துவார்கள். அதில் அமர்ந்து மன்னர் வீதி உலா அழைத்து வரப்படுவார்.

நாடு சுதந்திரம் பெற்று மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி மலர்ந்தபின், விஜயதசமி நாளில் நடக்கும் யானை ஊர்வலத்தின் போது, மன்னருக்கு பதிலாக சாமுண்டேஸ்வரி தேவியை தங்க அம்பாரியில் வைத்து ஊர்வலம் எடுத்துவரும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. அழகிய வேலைப்பாடுகளுடன் தயாரிக்கப்பட்டுள்ள அம்பாரியை காண்பதற்காக லட்சக்கணக்கான மக்கள் தசரா நாளில் கூடுகிறார்கள்.
தற்போதும் இந்த தங்க சிம்மாசனம் அரச குடும்பத்தின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. மைசூரு அம்பாவிலாஸ் அரண்மனையில் அம்பாரி வைக்கப்பட்டுள்ளது. இதில் யது வம்சத்தை சேர்ந்த 22 மன்னர்கள் அமர்ந்து ஆட்சி செய்துள்ளனர்.

தனித்தனியே 3 பகுதிகளாக உள்ள சிம்மாசனத்தை மீண்டும் கட்டமைக்க ஒரு மணி நேரம் ஆகும். இந்த சிம்மாசனம் அஸ்தினாபுரத்தை ஆண்ட தர்மராயா என்பவர் முதலில் பயன்படுத்தியதாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது அரசாட்சிக்கு பின் மைசூரு மகாராஜா இதை கைப்பற்றினார். இதையடுத்து மைசூரு மன்னர்கள் இதைப் பயன்படுத்தி வந்தனர். நவராத்திரி நாளில் பயன்படுத்த மூன்று பிரிவுகளாக இருக்கும் அம்பாரியை ஜோடிப்பது பெரிய விழாவாக நடத்தப்பட்டு வருகிறது.

மாவிலை, வாழைகுலை உள்ளிட்டவை கொண்டு சிம்மாசனம் அலங்கரிக்கப்படும். சிம்மாசனத்தின் உச்சியில் தங்க குடை அமைக்கப்பட்டிருக்கும். சிவன், பிரம்மன், விஷ்ணு ஆகியோரின் உருவமும் சிம்மாசனத்தில் அமைந்திருக்கும். சந்தனத்தால் ஆன சிங்க முகங்களும் இடம்பெற்று இருக்கும். மேலும் சிம்மாசனத்தில் பொருத்தப்பட்டுள்ள குடையில் சமஸ்கிருத ஸ்லோகங்கள் எழுதப்பட்டிருக்கும். இப்படி பல சிறப்புகள் அடங்கிய தங்க சிம்மாசனத்தை வரும் 12ம் தேதி நடக்கும் யானை ஊர்வலத்தின் போது, கண்டுகளிக்க பொதுமக்கள் ஆர்வமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மைசூரு மாநகரம் முழுவதும் மின்விளக்கொளி அலங்காரத்தில் இரவில் ஜொலிக்கும். பிருந்தாவம், சாமுண்டி மலை, கே.ஆர்.அணை ஆகிய சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் 10 நாட்கள் மைசூருவில் தங்கி தசரா விழாவை கண்டு ரசிப்பார்கள். நாட்டுப்புற கலைஞர்களின் நடன நிகழ்ச்சிகளும், பாரம்பரிய தெருக்கூத்து, நாடகங்களும், கன்னட இலக்கியவாதிகளின் சொற்பொழிவுகளும் விழாவின் சிறப்பு அம்சமாகும்.

The post தங்க அம்பாரி appeared first on Dinakaran.

Read Entire Article