தக்காளி விலை தொடர்ந்து சரிவு: நொய்யல் ஆற்றில் கொட்டி சென்ற வியாபாரிகள்

4 hours ago 3


திருப்பூர்: திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் செயல்படும் தெற்கு உழவர் சந்தை, புதிய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் வடக்கு உழவர் சந்தை மற்றும் தென்னம்பாளையம் தினசரி சந்தைக்கு திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமல்லாது வெளி மாவட்டங்களில் இருந்தும் சீசனின் போது வெளி மாநிலங்களில் இருந்தும் பல்வேறு காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களாகவே திருப்பூர் மாவட்டத்தின் குண்டடம், தாராபுரம், அவிநாசிபாளையம், அல்லாளபுரம், தெக்கலூர், கருவலூர், மூலனூர், ஓலப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தென்னம்பாளையம் சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக 15 கிலோ எடை கொண்ட பெட்டி ஒன்று ரூ.80 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

விலை குறைந்தாலும் போதிய வியாபாரம் இல்லை என வியாபாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று முன் தினம் வியாபாரம் ஆகாமல் தேக்கமடைந்த தக்காளியை வியாபாரிகள் தென்னம்பாளையம் அருகே நொய்யல் ஆற்றில் கொட்டி சென்றனர். இவை நொய்யல் ஆற்றில் மிதந்து சுமார் 2 கி.மீ வரை அடித்து சென்றது. தேவையை விட வரத்து அதிகரித்ததால் கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை எனவும் சில விவசாயிகள் பறிப்பு கூலி, மார்க்கெட்டிற்கு கொண்டு வருவதற்கான வண்டி வாடகை ஆகியவற்றை கருத்தில் கொண்டு தக்காளிகளை பறிக்காமல் விட்டு விடுகின்றனர். மார்க்கெட்டிற்கு கொண்டு வரம் தக்காளிகளும் முழுவதுமாக விற்பனையாவதில்லை. இதனால், தக்காளிகளை வியாபாரிகள் குப்பையிலும், நொய்யலாற்றிலும் கொட்டி செல்வதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post தக்காளி விலை தொடர்ந்து சரிவு: நொய்யல் ஆற்றில் கொட்டி சென்ற வியாபாரிகள் appeared first on Dinakaran.

Read Entire Article