தகுதி வாய்ந்த மாணவர்களை உருவாக்க பாட திட்டங்களில் மாற்றம் குறித்து ஆலோசிக்கப்படும்: அமைச்சர் கோவி.செழியன் தகவல்

1 month ago 3

சென்னை: சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் உயர்கல்வித்துறையின் மேம்பாடு குறித்த கருத்துக்கேட்பு கூட்டம் அமைச்சர் கோவி. செழியன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், உயர்கல்வித் துறை செயலர் கோபால் உள்ளிட்ட உயர்கல்வித் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர் நிருபர்களுக்கு அமைச்சர் அளித்த பேட்டி: நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயன்பெறும் மாணவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்து வருகிறோம். தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் பாடம் நடத்தினால் மொழி சார்ந்த மேம்பாடு இருக்கும் என மாணவர்கள் தெரிவித்தனர். தகுதி வாய்ந்த மாணவர்களை உருவாக்க வேண்டும் என்பதுதான் ஒற்றை எண்ணமாக இருக்கிறது. இது சம்பந்தமாக தக்க நடவடிக்கை எடுத்து புதிய பாடமா அல்லது புதிய பாடப்பிரிவில் பாடங்கள் சேர்க்கப்படுமா அல்லது பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்படுமா என்பது குறித்து அடுத்தடுத்த நாட்களில் முடிவு செய்து வரும் கல்வியாண்டில் பாடத்திட்டத்தில் அதற்கேற்ற பாடங்களை இணைத்து உயர்கல்வியை உச்சத்திற்கு எடுத்து செல்வோம். சென்னை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்கள் ஆராய்ச்சி கட்டுரைக்கான கட்டண உயர்வு குறித்து கலந்து பேசி முடிவு செய்வோம்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.

* 69 பேருக்கு முதலமைச்சர் ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்ட உதவி
முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டம் மற்றும் பாரதி இளங்கவிஞர் விருது வழங்கும் திட்டங்களின் கீழ் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகைக்கான ஆணைகள் மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தலைமையில் நேற்று கல்லூரிக் கல்வி இயக்கக கூட்டரங்கில் நடைபெற்றது. இத் திட்டத்தின் கீழ் 69 மாணவ, மாணவிகளுக்கு ஆணைகளையும், 2 நபர்களுக்கு பாரதி இளங்கவிஞர் விருது மற்றும் தலா ரூ.1 லட்சம் ஊக்கத் தொகையையும் அமைச்சர் வழங்கினார். நிகழ்வின்போது, உயர்கல்வித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் கோபால், கல்லூரிக் கல்வி இயக்கக ஆணையர் சுந்தரவல்லி ஆகியோர் உடனிருந்தனர்.

The post தகுதி வாய்ந்த மாணவர்களை உருவாக்க பாட திட்டங்களில் மாற்றம் குறித்து ஆலோசிக்கப்படும்: அமைச்சர் கோவி.செழியன் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article