த.வெ.க.வுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

2 months ago 16

சென்னை,

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மாலை, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலை பகுதியில் நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக மாநாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது அந்த பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாளை காலையில் முழுமையாக முடிக்கும் வகையில் அனைத்துப் பணிகளும் விறு விறுப்புடன் நடைபெற்று வருகிறது.

மாநாட்டு திடலில் கிழக்கு திசை நோக்கியவாறு 60 அடி அகலத்திலும், 170 அடி நீளத்திலும், 30 அடி உயரத்திலும் மாநாட்டு மேடை பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டு வளாகத்திற்குள் செல்வதற்கு 5 வழிகளும், வெளியே வருவதற்கு 15 வழிப்பாதைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் விஜய் வருவதற்கென்று தனி வழிப்பாதை ஏற்படுத்தப்பட்டு அங்கு தார் சாலை போடப்பட்டுள்ளது.



இந்த மாநாட்டில் விஜய் தன்னுடைய கட்சியின் கொள்கை குறித்து பேச உள்ளதாக தெரிகிறது. அத்துடன், தான் அறிமுகப்படுத்திய மஞ்சள், சிவப்பு நிறத்துடன் நட்சத்திரங்கள், யானை குறியீடுடன் கூடிய கொடி குறித்த விளக்கத்தையும் இந்த மாநாட்டில் விஜய் பேச உள்ளதாகவும் தெரிகிறது. எனவே, பரபரப்பும், எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் கூடிவருகிறது.

இதனிடையே, விஜய் கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களை மாநாட்டுக்கு வரும்படி வேண்டிவிரும்பி கேட்டுக் கொண்டு வருகிறார்கள். மாநாடு விழுப்புரத்தில் நடப்பதால், விழுப்புரம் மக்களுக்கு நேரிலேயே சென்று அழைப்பு விடுத்து வருகிறார்கள். இந்த மாநாட்டையொட்டி விக்கிரவாண்டி முழுவதுவமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

இந்தநிலையில், விஜய் ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில், தேர்தல் ஆணையம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதில், பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் இடம் பெற்றுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கு பின் புதியதாக பதிவு செய்த 39 கட்சிகளின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. கிழக்கு கடற்கரை சாலை, பனையூர் முகவரியில் த.வெ.க. பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Read Entire Article