
புதுடெல்லி,
நடிகர் விஜய், கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். தற்போது கட்சி தொடங்கப்பட்டு இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதற்கிடையே 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை மையமாக கொண்டு தேர்தல் பணிகளை விஜய் மேற்கொண்டு வருகிறார்.
புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து வரும் நடிகர் விஜய் சமீபத்தில், தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சந்தித்து அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தை வருகிற 26-ந்தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மார்ச் முதல் வாரத்தில் விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் த.வெ.க. தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள ஒய் பிரிவில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் என 8 முதல் 11 பேர் பாதுகாப்பு அளிப்பர் என்று கூறப்படுகிறது. விஜய்க்கு தமிழ்நாட்டிற்குள் மட்டும் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.