த.வெ.க. ஆர்ப்பாட்டத்திற்கு 16 நிபந்தனைகளுடன் அனுமதி

5 hours ago 2

சென்னை,

தமிழகத்தில் கடந்த நான்கு வருடங்களில் லாக்கப்பில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கேட்கும் வகையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை வைத்து, தமிழக வெற்றி கழகம் கட்சி சார்பில் நாளை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிவானந்தா சாலையில் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெறுகிறது.

இதற்காக பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு, லாக்கப் மரணங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். நாளை நடைபெற உள்ள போராட்டத்திற்கு போலீசார் தடை விதிக்கலாம் என எண்ணி அவர்களை முன்பே அலுவலகத்திற்கு வரவழைத்துள்ளனர் என கூறப்படுகிறது.

இதன்படி, காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்று, அதில் உயிரிழந்த செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த கோகுல் ஸ்ரீ குடும்பத்தினர், அயனாவரத்தைச் சேர்ந்த விக்னேஷ் குடும்பத்தினர், கொடுங்கையூரைச் சேர்ந்த அப்பு என்ற ராஜசேகர் குடும்பத்தினர், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தங்கமணியின் குடும்பத்தினர், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சின்னதுரை குடும்பத்தார், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த செந்தில் குடும்பத்தினர் ஆகியோர் அலுவலகத்திற்கு வந்துள்ளனர்.

இந்நிலையில், லாக்கப் மரணங்கள் தொடர்பாக, பலியானவர்களின் குடும்பத்தினரை, பனையூர் அலுவலகத்தில் வைத்து த.வெ.க. தலைவர் விஜய் இன்று நேரில் சந்தித்து பேசினார். அதில், உங்களுக்கான நீதியை பெற்று தருவேன் என அவர்களிடம் விஜய் உறுதியளித்து உள்ளார் என தகவல் வெளியானது. இதேபோன்று அவர்களுக்கு நிதியுதவியும் வழங்க உள்ளார் என கூறப்படுகிறது.

இந்நிலையில், த.வெ.க. போராட்டத்திற்கு 16 நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, ஆர்ப்பாட்டத்தின்போது, பைக் பேரணி செல்ல கூடாது, ஊர்வலம் நடத்த கூடாது, பட்டாசுகளை வெடிக்க கூடாது என 16 நிபந்தனைகள் காவல் துறை தரப்பில் அறிவுறுத்தலாக வழங்கப்பட்டு உள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர், தொண்டர்கள் என 6 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். இதனை முன்னிட்டு, 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

Read Entire Article