
புவனேஸ்வரம்,
காதல் திருமணம் செய்த ஜோடியை, ஏர் கலப்பையில், மாடுகளைபோல் பூட்டி சித்ரவதை செய்த காட்சி சமூகவலைத்தளத்தில் வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விண்வெளியில் விவசாயம் செய்ய முடியுமா என்று ஆய்வு நடத்தும் இந்த அறிவியல் காலத்திலும் இப்படி ஒரு கொடுமையா என்று கேட்கும் அளவுக்கு நடந்த இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டம் நியமகிரி மலைப்பகுதியில் உள்ள சிகரபை பஞ்சாயத்துக்கு உட்பட்டது கஞ்சமஜிரா கிராமம். மலைவாழ் பழங்குடியின மக்கள் வசிக்கும் இந்த கிராமத்தில், தந்தை வழி அத்தை மகனை திருமணம் செய்யக்கூடாது என்ற கட்டுப்பாட்டை அந்த ஊர் பஞ்சாயத்தார் விதித்துள்ளனர். இதை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கி, அவர்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கும் பழக்கம் அங்கு உள்ளது. இந்தநிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர், தனது அத்தை மகனை காதலித்து வந்துள்ளார். இருவரும் ஊர் கட்டுப்பாட்டை மீறி திருமணம் செய்து கொண்டனர்.
இதையறிந்த ஊர் பஞ்சாயத்தார், அந்த ஜோடியை பிடித்து அங்குள்ள வயல்வெளிக்கு அழைத்து வந்தனர். பின்னர் அந்த ஜோடியை ஏர் கலப்பையில் மாடுகளை போல் பூட்டி, வயலில் உழவைத்தனர். அப்போது அவர்களை ஒருவர் சாட்டையால் அடித்தார். கண்ணீருடன் அந்த ஜோடி இந்த சித்ரவதையை அனுபவித்தது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலானது.
வலைத்தளங்களில் கொடூர காட்சிகளை பார்த்த சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த ராயகடா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுவாதிகுமார், சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார். தற்போது இந்த சம்பவம் ஒடிசா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.