ரஷ்யா: அமெரிக்க அதிபராக தேர்வாகி உள்ள டொனால்ட் டிரம்ப் உயிருக்கு ஆபத்து என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரித்துள்ளார். அமெரிக்காவில் கடந்த நவம்பர் 5 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் டொனால்ட் டிரம்ப் அபார வெற்றி பெற்றார். இதையடுத்து அதிபர் தேர்தலில் வென்றுள்ள டிரம்ப் தனது அமைச்சரவையில் இடம்பெறப் போகும் நபர்களைத் தேர்வு செய்து வருகிறார். அவர் தனது அமைச்சரவையுடன் அடுத்தாண்டு தொடக்கத்தில் அதிபராகப் பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில் அமெரிக்க அதிபராகத் தேர்வாகியுள்ள டிரம்ப் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். டிரம்பை ஒரு அனுபவம் வாய்ந்த மற்றும் அறிவார்ந்த அரசியல்வாதி என்று பாராட்டிய புதின், அதேநேரம் டிரம்பின் மீது ஏற்கனவே கொலை முயற்சிகள் நடந்துள்ள நிலையில், அவர் பாதுகாப்பாக இல்லை என்றும் கூறியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
ஏற்கனவே அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தின்போது டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அப்போது டொனால்ட் டிரம்ப் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். அதனை தொடர்ந்து 2 முறை அவர் உயிர் பிழைத்தார். எனினும் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவரது கட்சியினர் கூறி வந்தனா். இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், டொனால் டிரம்ப்பை கவனமாக இருக்கும்படியும், அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் எச்சரித்து உள்ளார். இது சர்வதேச அளவில் பதற்றத்தை உருவாக்கி உள்ளது. அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்ட டொனால்ட் டிரம்ப், உக்ரைன் மற்றும் ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருவதாக கூறி இருந்தார். இதுபோன்ற சூழலில் டொனால்ட் டிரம்ப் உயிருக்கு ஆபத்து என ரஷ்ய அதிபர் கூறி உள்ளார்.
The post டொனால்ட் டிரம்ப் உயிருக்கு ஆபத்து: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கொடுத்த எச்சரிக்கை..!! appeared first on Dinakaran.