அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க, பதிவு செய்த அரசியல் கட்சி என ஆதாரத்துடன் விண்ணப்பித்தால் பரிசீலிக்கலாம் : ஐகோர்ட் ஆணை

7 hours ago 2

சென்னை : அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க, பதிவுசெய்த அரசியல் கட்சி என ஆதாரத்துடன் விண்ணப்பித்தால் பரிசீலிக்கலாம் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி கட்சி தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக மார்ச் 5-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தங்கள் கட்சிக்கு அழைப்பு விடுக்காததால் அனைத்து கட்சி கூட்டத்திற்கு தடை கோரி தேசிய மக்கள் சக்தி கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இது தொடர்பாக தேசிய மக்கள் சக்தி கட்சித்தலைவர் எம்.எல்.ரவி தாக்கல் செய்த மனுவில், “எங்கள் கட்சிக்கு அழைப்பு விடுக்கவில்லை. எனவே, அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்.எந்த தேர்தலிலும் களம் காணாத பல கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது பாரபட்சமானது”. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “பதிவு செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க முடியும். மனுதாரர் கட்சி பொதுத்துறை செயலாளரிடம் விண்ணப்பித்தால் பரிசீலிக்கப்படும்.,”என வாதிட்டார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க, பதிவுசெய்த அரசியல் கட்சி என ஆதாரத்துடன் விண்ணப்பித்தால் அரசு பரிசீலிக்க வேண்டும். கட்சியின் பதிவு தொடர்பான ஆதாரத்துடன் பொது துறையிடம் இன்றே விண்ணப்பிக்க மனுதாரர் கட்சி ஆணையிடுகிறோம்,”இவ்வாறு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

The post அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க, பதிவு செய்த அரசியல் கட்சி என ஆதாரத்துடன் விண்ணப்பித்தால் பரிசீலிக்கலாம் : ஐகோர்ட் ஆணை appeared first on Dinakaran.

Read Entire Article