டைடல் பார்க்கை தொடர்ந்து ரூ.155 கோடியில் சர்வதேச தரத்தில் விழுப்புரத்தில் மருத்துவ பூங்கா: 16,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

4 weeks ago 4

நாட்டிலேயே தொழில்துறையில் முன்னோடி மாநிலமாக தமிழகம் உருவெடுத்து வருகிறது. பொறியியல், தகவல் தொழில்நுட்பம், மோட்டார் வாகனம், உதிரிபாகங்கள், ஜவுளி, தோல் தொழிற்சாலை என அனைத்திலும் முன்னிலையில் உள்ளன. முன்னாள் முதல்வர் கலைஞர் காலத்தில் போடப்பட்ட அடித்தளம் இன்று தொழில்துறை ஆலமரமாக வளர்ந்திருக்கிறது. வளர்ந்த நாடுகளில் உள்ள ஐடி துறைகள் தமிழகத்தில் தொடங்க வித்திட்டவர் முன்னாள் முதல்வர் கலைஞர். அதன்படி தற்போதைய தமிழ்நாடு அரசு பின்தங்கிய மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சியை பெருக்க பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் தொழிற்சாலைகளை கொண்டு வருகிறது.

உற்பத்தி மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சியில் அதிகமான தனியார் மற்றும் பொதுத்துறை முதலீட்டை ஈர்க்க வேண்டும். தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தொழில்துறையில் சமமான வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம் நீடித்த பொருளாதார வளர்ச்சியை அடைந்து, அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கி தந்து தமிழக மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திட வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. அதன்படி சென்னை, கோவை போன்ற முக்கிய நகரங்களைபோல் கல்வி, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களுக்கும் தொழிற்சாலை அறிவிப்புகள் வெளியிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி தொழில்துறையில் பின்தங்கிய விழுப்புரம் மாவட்டம் வானூரில் ரூ.35 கோடியில் நியோ டைடல் பார்க் கடந்த ஒரு மாதத்துக்கு முன் திறக்கப்பட்டு இயங்கி வருகிறது. தற்போது, விழுப்புரம் மாவட்டம், மயிலம் சட்டமன்ற தொகுதியில் பெலாகுப்பம் சிப்காட் வளாகத்தில் 111 ஏக்கர் பரப்பளவில், ரூ.155 கோடி திட்ட மதிப்பீட்டில் பல்வேறு நவீன வசதிகளுடன் மருந்துப் பொருட்கள் தயாரிப்பதற்காக சர்வதேச தரத்தில் பிரத்யேக மருத்துவ பூங்கா அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இது இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது மட்டுமின்றி விழுப்புரம் மாவட்டம் தொழில்துறையின் மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கிசெல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கு முதல்கட்டமாக தமிழக அரசின் நிதி உதவியாக ரூ.51.56 கோடி மற்றும் ஒன்றிய அரசின் நிதி உதவியாக ரூ.20 கோடியில் பொது வசதி மையம், பூஜ்ய திரவ வெளியேற்றத்துடன் கூடிய கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், மருந்து பொருட்களை சேமிப்பதற்கான சேமிப்பு கிடங்கு, உலகளாவிய தரக்கட்டுப்பாட்டு சோதனை மையம் போன்றவை அமைக்கப்பட உள்ளன. இத்திட்டத்தில் அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைவதற்காக தமிழ்நாடு அரசால் தமிழ்நாடு பட்டியலினத்தவர், பழங்குடியினர் புத்தொழில் நிதித்திட்டம், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் வழியாக செயல்பட இருக்கிறது.

இப்பூங்காவில் 50க்கும் மேற்பட்ட மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் சுமார் 6,000 நபர்கள் நேரடியாகவும், 10,000 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவார்கள். மருத்துவ பூங்கா அமைப்பதற்காக பூமி பூஜை போடப்பட்டுள்ள நிலையில் மழை காலத்திற்குபின் இந்த பணிகள் முழுமையாக முடிவடைந்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் படித்துவிட்டு வேலைக்காக வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களுக்கு இளைஞர்கள் செல்லும் நிலை இருந்தது.

இதன்மூலம் தங்குவது, உணவு உள்ளிட்டவைகளுக்கே ஊதியத்தை செலவிடும் நிலை ஏற்பட்டது. தற்போது சொந்த மாவட்டத்திலேயே பொறியியல், மருத்துவம், டிப்ளமோ உள்ளிட்ட கல்வித் தகுதிகளுக்கு ஏற்ற வேலைவாய்ப்பை கொடுக்க தொழிற்சாலைகள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருவது வரவேற்பை பெற்றுள்ளது. இதன்மூலம் அடுத்துவரும் சில காலங்களில் சென்னையை சுற்றியுள்ள தொழிற்சாலைகள் வளமிக்க மாவட்டமாக விழுப்புரம் மாறும் என்பதில் மாற்று கருத்து கிடையாது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

* திண்டிவனத்தில் உள்ள ‘கிராக்ஸ்’ தொழிற்சாலை விரிவாக்கம் செய்ய முடிவு
திண்டினம் அடுத்த பெலாக்குப்பம் சிப்காட்டில் உலக தரம் வாய்ந்த உற்பத்தி நிறுவனமான கிராக்ஸ் காலணி தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. கிராக்ஸ் செருப்புகள் குறைந்த எடையில், பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்படுகின்றன. நாடுமுழுவதும் கிராக்ஸ் காலனிகளுக்கு தேவைகள் உள்ள நிலையில் திண்டிவனம் சிப்காட்டில் இந்த தொழிற்சாலையை கடந்த ஆண்டு முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து முதற்கட்டமாக தற்போது 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள், பெண்கள் பணியாற்றி வருகின்றனர். விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு என மூன்று மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள், பெண்கள் பணியாற்றி வருகின்றனர். 10, 12ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பிஇ உள்ளிட்ட கல்வி தகுதிகளுக்கு ஏற்ப குறைந்தபட்சம் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம், ரூ.40 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்பட்டு வருகின்றன.

நன்கு வளையகூடிய உயர்ரக மெட்டீரியல்கள் மூலம் கால்களுக்கு ஸ்டைலாகவும், லுக்காகவும், வாக்கிங், ஷாப்பிங் என உடற்பயிற்சிக்கு ஏற்றவகையிலும் தயாரிக்கப்படும் இந்த கிராக்ஸ் செருப்புகள் இந்தியா முழுவதும் மட்டுமின்றி தைவான் போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தொழிற்சாலை திறந்து 6 மாதங்களைக் கடந்த நிலையில் உற்பத்தியும், தேவையும் அதிகரித்து வருவதால் இந்த தொழிற்சாலையை மேலும் விரிவாக்க செய்யவும் அந்தநிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மேலும் பல ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது மட்டுமில்லாமல், பின்தங்கிய விழுப்புரம் மாவட்ட வளர்ச்சிக்கு முக்கியத்துவமாகவும், இந்த தொழிற்சாலை அமைந்துள்ளது.

* ரூ.2,302 கோடியில் உளுந்தூர்பேட்டையில் தோல் இல்லாத காலணி தொழிற்சாலை: 20,000 பேருக்கு வேலை கிடைக்கும்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதி என்பது மாவட்டத்தின் பெரிய தொகுதியாகவும், அதிக மக்கள் தொகை கொண்ட தொகுதியாகவும் உள்ளது. இந்த தொகுதியில் கடந்த திமுக ஆட்சியின் போது அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதியால் ஆசனூர் சிட்கோ பகுதியில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் கொண்டு வரப்பட்டு அங்கு தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் நடந்து வருகிறது. இதனால் உளுந்தூர்பேட்டை தொகுதியில் படித்த பட்டதாரிகள் மற்றும் தொழில் பயிற்சி படிப்புகள் முடித்த இளைஞர்கள் நலன் கருதி அந்த சிட்கோ பகுதியில் வேலை வாய்ப்புகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் படித்த பட்டதாரி பெண்கள் மட்டுமின்றி பத்தாம் வகுப்பு முதல் உயர் கல்வி வரை படித்த பெண்கள் மற்றும் இளைஞர்கள் சுமார் 20,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கும் வகையில் உளுந்தூர்பேட்டை அருகே எ.சாத்தனூர் என்ற இடத்தில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் தோலில்லா காலணி தொழிற்சாலை ரூ.2302 கோடி முதலீட்டில் அமைய உள்ளது. சென்னையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தைவான் நாட்டை சேர்ந்த பவுச்சன் நிறுவனத்துடன் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது.

இதில் தற்போது அடிப்படை பணிகளான கட்டுமான பணிகள் மற்றும் சாலை போடும் பணிகள், மின்கம்பங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த தோலில்லா காலணி தொழிற்சாலைக்கு பணிபுரிய படித்த இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு சென்னை மற்றும் உளுந்தூர்பேட்டை பகுதியில் ஆறு மாதம் மற்றும் ஒரு வருட கால பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி முடிந்த அனைவருக்கும் வேலை வாய்ப்புகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த தொழிற்சாலை அமைவதன் மூலம் சுமார் 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளதால் உளுந்தூர்பேட்டை பகுதி படித்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

The post டைடல் பார்க்கை தொடர்ந்து ரூ.155 கோடியில் சர்வதேச தரத்தில் விழுப்புரத்தில் மருத்துவ பூங்கா: 16,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article