மெல்போர்ன்,
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் கடந்த 26-ந்தேதி தொடங்கியது. 'பாக்சிங் டே' என்று அழைக்கப்படும் இந்த டெஸ்டில் முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலியா 474 ரன்களும், இந்தியா 369 ரன்களும் எடுத்தன. 105 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 234 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இதன் மூலம் இந்தியாவுக்கு 340 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா 79.1 ஓவர்களில் 155 ரன்களில் சுருண்டது. இதனால் ஆஸ்திரேலியா 184 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. முதலாவது டெஸ்டில் இந்தியாவும், 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றிருந்தன. 3-வது டெஸ்ட் மழையால் டிராவானது.
மெல்போர்னில் நடைபெற்ற இந்த போட்டி ரசிகர்களின் வருகையில் புதிய மைல்கல் படைத்துள்ளது. 5 நாட்களையும் சேர்த்து இந்த போட்டியை 3 லட்சத்து 73 ஆயிரத்து 691 ரசிகர்கள் கண்டுகளித்துள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரசிகர்கள் நேரில் கண்டுகளித்த போட்டி இதுதான்.
இதற்கு முன்பு 1937-ம் ஆண்டு இதே மைதானத்தில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து போட்டியை 3 லட்சத்து 50 ஆயிரத்து 534 பேர் பார்த்ததே அதிகபட்சமாக இருந்தது.
மேலும் பாக்சிங் டே டெஸ்ட் வரலாற்றிலும் அதிக ரசிகர்கள் கண்டுகளித்த போட்டியாகவும் இது அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.