டெஸ்ட் போட்டிகளில் இருந்து கிரிக்கெட் ஜாம்பவான்: கோஹ்லி ஓய்வு

5 hours ago 2

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி (36), டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

கடந்தாண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் போட்டி தொடரில் இந்தியா,1-3 என்ற கணக்கில் மோசமான தோல்வியை தழுவியது. அப் போட்டிகளில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோஹ்லி ஆகிய இருவரும் சிறப்பாக ஆடாதது ரசிர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த தொடர் தோல்விகளால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெறவில்லை. அதையடுத்து, ரோகித் சர்மா, விராட் கோஹ்லி ஓய்வு பெற்றால் அணிக்கு நல்லது என முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், சமூக வலைதளத்தில் ரசிகர்களும் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில், ஐபிஎல் போட்டிகள் துவங்கின. மும்பை அணிக்காக ஆடிய ரோகித் சர்மா, வழக்கம் போல் மீண்டும் சொதப்பலாக ஆடினார். பெங்களூரு அணிக்காக ஆடிய கோஹ்லி ஆரம்பத்தில் சொதப்பினாலும் கடைசி கட்டத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். ஐபிஎல் இறுதிக் கட்டத்தை நெருங்கிய நிலையில், இந்தியா – பாக் இடையே போர் மேகங்கள் சூழ்ந்நதால் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. அப்போது, டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா அறிவித்தார். ரோகித்தின் அறிவிப்பை தொடர்ந்து, விராட் கோஹ்லியும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாக பிசிசிஐயிடம் தெரிவித்தார். ஓய்வு அறிவிப்பை கோஹ்லி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பிசிசிஐ தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக கூறப்பட்டது. இருப்பினும், தன் நிலையில் உறுதியாக இருந்த கோஹ்லி, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்ஸ்டாகிராம் பதிவில் நேற்று அறிவித்தார். அவரது அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

இந்திய கிரிக்கெட்டில் தனது சாதனைகளால் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தி, இந்திய அணியின் பல்வேறு வெற்றிகளுக்கு பக்க பலமாக கோஹ்லி இருந்ததாக முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். கடந்த முறை டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்ற பின், டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஏற்கனவே, கோஹ்லி அறிவித்திருந்தார். இனி, ஒரு நாள் போட்டிகளில் மட்டும் கோஹ்லி தொடர்ந்து ஆட உள்ளார். இந்திய கிரிக்கெட் அணிக்காக, கடந்த 2011 முதல் ஆடி வரும் விராட் கோஹ்லி, 10,000 ரன்களை டெஸ்ட் போட்டியில் கடக்க விரும்புவதாக சில ஆண்டுகளுக்கு முன் அளித்த பேட்டியில் கூறியிருந்தார். அவரது ஆசை நிறைவேறும் முன், டெஸ்ட் போட்டிகளில் அவர் ஓய்வு பெறுவது ரசிகர்களை கலங்கச் செய்துள்ளது.

எளிதானதல்ல…ஆனாலும் சரியான முடிவு
ஓய்வு தொடர்பாக, இன்ஸ்டாகிராமில், கோஹ்லியின் பதிவு: டெஸ்ட் போட்டிகளில் ஆடத் துவங்கி 14 ஆண்டுகள் கடந்து விட்டன. இப்போட்டிகள் என்னை சோதித்து பார்த்தன… செம்மைப் படுத்தின. என் வாழ் நாள் முழுமைக்குமான பாடங்களை கற்பித்தன. கிரிக்கெட் ஆட்டத்தின்போது, எனக்கு கிடைத்த அனுபவங்கள், மறக்க முடியாத சின்ன சின்ன தருணங்களை என்றென்றும் நினைவில் கொள்வேன். டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகுகிறேன். இந்த முடிவு எளிதானதல்ல.. அதேசமயம் சரியான முடிவு. என்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்துள்ளேன். மாறாக, கிரிக்கெட், நான் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே திரும்ப, வாரித் தந்துள்ளது. ஆடுகளத்தை பகிர்ந்து கொண்டோர் மற்றும் என்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய ஒவ்வொரு மனிதருக்கும், முழுமையான நன்றி உணர்வுடன் நான் விடைபெறுகிறேன். என் டெஸ்ட் வாழ்க்கையை எப்போதும் புன்னகையுடன் திரும்பிப் பார்ப்பேன்.

கிங் கோஹ்லியின் மகுடத்தில் பொதிந்த சாதனை வைரங்கள்

  • ஒரு நாள் போட்டிகளில் 2வது அதிகபட்சமாக, 125 அரை சதங்களை கோஹ்லி விளாசி உள்ளார்.
  •  சர்வதேச டி20 போட்டிகளில் கோஹ்லி, அதிகபட்சமாக, 117 இன்னிங்ஸ்களில் 39 முறை, 50க்கு கூடுதலாக ரன்களை குவித்துள்ளார்.
  •  ஒரு நாள் போட்டிகளில் 4வது அதிகபட்ச பவுண்டரிகளை (1325) கோஹ்லி விளாசியுள்ளார்.
  •  ஒரு நாள் போட்டிகளில் 2வது அதிகபட்சமாக 161 கேட்ச்களை கோஹ்லி பிடித்துள்ளார்.
  •  டி20 போட்டித் தொடர்களில் அதிகபட்சமாக 7 முறை தொடர் நாயகன் விருது வென்றுள்ளார்.
  • ஒருநாள் போட்டிகளில் 3வது அதிகபட்சமாக, கோஹ்லி, 290 இன்னிங்ஸ்கள் ஆடி 57.88 சதவீத சராசரி வைத்துள்ளார்.
  •  ஒரு நாள் போட்டிகளில் உலகளவில், 14,000 ரன்களை கடந்த ஒரே வீரர் கோஹ்லி. இந்த சாதனையை, 287 இன்னிங்ஸ்களில் அவர் படைத்துள்ளார்.
  • ஒரு நாள் போட்டித் தொடர்களில், சச்சின் டெண்டுல்கருக்கு (15 முறை) பிறகு, அதிக முறை தொடர் நாயகன் விருதுகளை கோஹ்லி (11 முறை) பெற்றுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு சகாப்தம் முடிகிறது
விராட் கோஹ்லியின் (36 வயது) ஓய்வை அடுத்து, பிசிசிஐ, எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு சகாப்தம் முடிகிறது. இருப்பினும், கோஹ்லி படைத்த சாதனை நினைவுகள் என்றென்றும் தொடரும். இந்திய அணிக்காக விராட் கோஹ்லி அளித்த சிறப்பான பங்களிப்பை என்றும் நினைவில் கொள்வோம்.

The post டெஸ்ட் போட்டிகளில் இருந்து கிரிக்கெட் ஜாம்பவான்: கோஹ்லி ஓய்வு appeared first on Dinakaran.

Read Entire Article