
பர்மிங்காம்,
இந்தியா -இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது போட்டி பர்மிங்காமில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 151 ஓவர்களில் 587 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக இந்திய கேப்டன் சுப்மன் கில் 269 ரன்களும், ஜடேஜா 89 ரன்களும் அடித்தனர். இங்கிலாந்து தரப்பில் ஷோயப் பஷீர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கி உள்ளது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் கிராலி மற்றும் பென் டக்கெட் களமிறங்கி உள்ளனர். இந்தியா தரப்பில் ஆகாஷ் தீப் முதல் ஓவரை வீசுகிறார்.
இந்த ஆட்டத்தில் 269 ரன்கள் அடித்த சுப்மன் கில் இங்கிலாந்து மண்ணில் அதிகபட்ச ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னர் 1979-ம் ஆண்டு சுனில் கவாஸ்கர் 221 ரன்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது சுனில் கவாஸ்கரின் அந்த மாபெரும் சாதனையை முறியடித்துள்ள சுப்மன் கில் புதிய சாதனை படைத்துள்ளார்.