டெஸ்ட் கிரிக்கெட்: கபில் தேவின் வாழ்நாள் சாதனையை தகர்த்த ஜஸ்பிரித் பும்ரா

3 hours ago 2

லண்டன்,

இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்தும், பர்மிங்காமில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்.

அதன்படி பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 112.3 ஓவர்கள் தாக்குப்பிடித்த நிலையில் 387 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோ ரூட் 104 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகளும், சிராஜ் மற்றும் நிதிஷ் ரெட்டி தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இந்த ஆட்டத்தில் கைப்பற்றிய 5 விக்கெட்டுகளையும் சேர்த்து ஜஸ்பிரித் பும்ரா இதுவரை வெளிநாடுகளில் (இந்தியாவுக்கு வெளியே) நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் 13 முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வெளிநாடுகளில் அதிக முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னர் கபில் தேவ் 12 முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது கபில் தேவின் அந்த வாழ்நாள் சாதனையை தகர்த்துள்ள பும்ரா புதிய சாதனை படைத்துள்ளார்.

அந்த பட்டியல்:

1. ஜஸ்பிரித் பும்ரா - 13 விக்கெட்டுகள்

2. கபில் தேவ் - 12 விக்கெட்டுகள்

3. அனில் கும்ப்ளே - 10 விக்கெட்டுகள்

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர் ஆன ஜெய்ஸ்வாலின் (13 ரன்கள்) விக்கெட்டை விரைவில் இழந்தது. இருப்பினும் கே.எல்.ராகுல் - கருண் நாயர் பார்ட்னர்ஷிப் அமைத்து நிதானமாக ஆடி வருகின்றனர். 

Read Entire Article