
பர்மிங்காம்,
இந்தியா -இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது போட்டி பர்மிங்காமில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 85 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 310 ரன்கள் அடித்திருந்தது. கேப்டன் சுப்மன் கில் 114 ரன்களுடனும், ஜடேஜா 41 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஜெய்ஸ்வால் 87 ரன்களில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார்.
இந்த சூழலில் 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பேட்டிங் செய்த ஜடேஜா - சுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு தண்ணி காட்டிய இந்த கூட்டணி 414 ரன்களில் பிரிந்தது. சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜடேஜா 89 ரன்களில் ஆட்டமிழந்தார். சுப்மன் கில் - ஜடேஜா ஜோடி 204 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது குறிப்பிடத்தக்கது. அடுத்து சுப்மன் கில்லுடன் வாஷிங்டன் சுந்தர் கை கோர்த்தார்.
இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த கேப்டன் சுப்மன் கில் இரட்டை சதம் விளாசினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது முதல் இரட்டை சதம் இதுவாகும்.
அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சேனா நாடுகளில் (தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா) இரட்டை சதம் அடித்த முதல் ஆசிய கேப்டன் என்ற வரலாற்று சாதனையையும் சுப்மன் கில் படைத்துள்ளார். இதற்கு முன்னர் இலங்கையின் திலகரத்னே தில்ஷன் 2011- ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் 193 ரன்கள் அடித்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது அதனை முறியடித்துள்ள சுப்மன் கில் புதிய வரலாறு படைத்துள்ளார்.
தற்போது வரை இந்திய அணி 134 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 542 ரன்கள் குவித்துள்ளது. சுப்மன் கில் 253 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 34 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.