கான்பூர்,
இந்தியா - வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் கடந்த 27-ந்தேதி தொடங்கியது.
இதில் 'டாஸ்' ஜெயித்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து மழை பாதிப்புக்கு மத்தியில் முதலில் பேட் செய்த வங்காளதேசம் தொடக்க நாளில் 35 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. அதனால் முதல் நாள் ஆட்டம் அத்துடன் நிறுத்தப்பட்டது. மொமினுல் ஹக் (40 ரன்), முஷ்பிகுர் ரஹிம் (6 ரன்) களத்தில் இருந்தார்கள். 2-வது மற்றும் 3-வது நாள் ஆட்டங்கள் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டன.
இதனையடுத்து 4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பேட்டிங் செய்த வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 233 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக மொமினுல் ஹக் 107 ரன்கள் குவித்தார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஆரம்பம் முதலே அதிரடியில் களமிறங்கியது. முதல் 3 ஓவர்களிலேயே இந்தியா 50 ரன்களை கடந்தது. அதிரடியில் வெளுத்து வாங்கிய இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 50 (3 ஓவர்கள்), 100 (10.1 ஓவர்கள்) 150 (18.2 ஓவர்கள்) மற்றும் 200 (24.2 ஓவர்கள்) ரன்களை கடந்த அணி என்ற உலக சாதனைகளை படைத்துள்ளது.
இந்தியா தற்போது வரை 4 விக்கெட்டுகளை இழந்து 217 ரன்களுடன் விளையாடி வருகிறது.