
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20-ந் தேதி லீட்சில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான 18 வீரர்கள் கொண்ட இந்திய அணி மும்பையில் நேற்று அறிவிக்கப்பட்டது. அகர்கர் தலைமையிலான தேர்வு குழுவினர் அணியை தேர்வு செய்து அறிவித்தனர்.
இந்த மாத தொடக்கத்தில் டெஸ்ட் போட்டியில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெற்றதால் அடுத்த கேப்டன் யார்? என்று அதிக எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் எதிர்பார்த்தபடி சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இளம் வீரரான அவருக்கு கேப்டன் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெளிநாட்டு மண்ணில் சுப்மன் கில் வெறும் 25 என்ற மோசமான சராசரியைக் கொண்டுள்ளதாக இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். எனவே கேப்டனாக செயல்படும் அளவுக்கு அவருக்கு தகுதி கிடையாது என்று அவர் விமர்சித்துள்ளார். இருப்பினும் வருங்காலத்தில் அசத்துவார் என்ற நம்பிக்கையுடன் அவரை தேர்வுக்குழு கேப்டனாக நியமித்துள்ளதாகவும் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "அவருடைய டெஸ்ட் பேட்டிங் சராசரி 35. வெளிநாட்டு மண்ணில் அது 25. அது ஒரு பேட்ஸ்மேனாக அவ்வளவு ஆரோக்கியமானதல்ல. ஒரு கேப்டனாக இருப்பது ஒருபுறம் இருக்கட்டும். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருக்கு நிறைய சவால்கள் இருக்கிறது. ஒருநாள் போட்டிகளாக இருந்தால், நாங்கள் முற்றிலும் சரி என்று கூறியிருப்போம். ஒருநாள் கிரிக்கெட்டில் குறிப்பிட்ட காலம் அவர் துணைக் கேப்டனாக இருப்பதால் பிரச்சனை இல்லை.
ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிநாட்டு மண்ணில் எந்த இடம் பொருத்தமாக இருக்கும் என்பதையே இன்னும் அவர் தேடிக் கொண்டிருக்கிறார். குறிப்பாக வெளிநாட்டு மண்ணில். எனவே, இதை நான் நம்பிக்கையின் முதலீடாகப் பார்க்கிறேன். நீங்கள் ஒருவரைப் பார்த்து அவருடைய திறமையை நம்பி வருங்காலத்தில் அசத்துவார் என்ற எதிர்பார்ப்புடன் இந்த முடிவை எடுத்துள்ளீர்கள்.
வெளிநாட்டு மண்ணில் அவர் இதுவரை 15 டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளார் என்று நினைக்கிறேன். அந்தப் போட்டிகளில் எங்கு பேட்டிங் செய்ய விரும்புகிறார் என்ற தேர்வு அவருக்கு வழங்கப்பட்டது. தொடக்க வீரராக இருந்த அவருக்கு போட்டியாக ஜெய்ஸ்வால் வந்தார். அதனால் அவர் 3-வது இடத்தில் விளையாட விரும்புவதாக தெரிவித்தார். எப்படி இருந்தாலும் வெறும் 15 போட்டியில் விளையாடிய ஒருவரை நீங்கள் கேப்டனாக்க விரும்ப மாட்டீர்கள். நிச்சயம் இது அணி நிர்வாகத்தின் முடிவாக இருக்க வேண்டும்" என்று கூறினார்.