டெல்லியில் நாளை அனைத்து கட்சி கூட்டம்: மத்திய அரசு அழைப்பு

1 week ago 4

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முப்படைகளும் இணைந்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள் மற்றும் தலைமையகங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 9 இலக்குகள் மீது இந்தியா குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதனால் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்த பரபரப்பான சூழலில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடந்தது. இதையடுத்து முப்படை தளபதிகள், மூத்த மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். மேலும் உடனடியாக எல்லைக்கு செல்ல பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்குக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் இன்று மாலை போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

இந்த நிலையில் நாளை அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. டெல்லியில் நாளை காலை 11 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, கிரண் ரிஜிஜூ ஆகியோர் முன்னிலையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாடி உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார்.

Read Entire Article