
புதுடெல்லி,
டெல்லி-என்.சி.ஆர். பகுதியில் கடந்த ஒரு வார காலம் வரை வெப்பம் வாட்டி வந்த நிலையில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது. இதுபற்றி இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில், வடமேற்கு சமவெளி பகுதிகளில் மேற்கத்திய காற்று வீசியதே இந்த வானிலை மாற்றத்திற்கு காரணம் என தெரிவித்தது.
இதனால் நொய்டா, காசியாபாத், குருகிராம் மற்றும் மத்திய மற்றும் தெற்கு டெல்லியின் சில பகுதிகளில் லேசான மழை பதிவானது. சில இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதேபோன்று, மேகமூட்டத்துடன் கூடிய புழுதி புயலும் வீசியது.
டெல்லியில் 40 டிகிரி செல்சியசுக்கும் கூடுதலாக வெப்பம் பதிவான நிலையில், இந்த வானிலை மாற்றம் பதிவாகி உள்ளது. முதல் வெப்ப அலை பரவி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வந்த சூழலில், மழை பெய்ததும், திரளான மக்கள் கர்தவ்ய பாதை பகுதியில் குவிந்து மகிழ்ச்சியாக அதனை கொண்டாடினர்.
இதேபோன்று, ஜார்கண்டின் ஹசாரிபாக், உத்தர பிரதேசத்தின் லக்னோ மற்றும் கான்பூர் நகரங்களின் பல்வேறு பகுதிகளில் இன்று லேசான மழை பதிவாகி உள்ளது.