
புதுடெல்லி,
சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இன்று இரவு 7 மணியளவில் டெல்லியில் உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது அதிமுக- பாஜக கூட்டணி குறித்து பேசப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவருக்கு முன்னதாக இன்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார். டெல்லி நாடாளுமன்ற அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்துள்ளதாக ஜி.கே.வாசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆனால் எடப்பாடி – அமித்ஷா சந்திப்புக்கு முன்னதாக ஜி.கே.வாசன் சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மக்களவைத் தேர்தல் சமயத்தில் பாஜகவும் அதிமுகவும் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில் அதிக முனைப்புடன் இருந்தவர் ஜி.கே.வாசன் என்பது குறிப்பிடத்தக்கது.