டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை ஒட்டி, இன்று காலை 11 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம் டெல்லியில் தொடங்கியது. நாளை முதல் வரும் டிசம்பர் 20ம் தேதி வரை இக்கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. முன்னதாக அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது.
இதன்படி இன்று காலை 11 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது. அதில் நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து மத்திய அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
“ஒரே நாடு ஒரே தேர்தல்” மற்றும் வக்பு சட்ட திருத்தம் உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்பு காட்டி வரும்நிலையில், அதானி மீதான அமெரிக்கா அதிகாரிகளின் லஞ்ச புகார் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் குறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு தனது எக்ஸ் வலைதளத்தில், “மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் நாளை ( நவ., 25-ம் தேதி) முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை குளிர்கால கூட்டத்தொடரை இரு அவைகளிலும் நடத்த ஜனாதிபதி ஒப்புதல் வழங்கி உள்ளார். மேலும் நாளை மறுநாள் ( நவ.26-ம் தேதி) நாடாளுமன்ற மையம் மண்டபத்தில் அரசியல் சாசனத்தின் 75-ம் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்படும்” என்று அதில் பதிவிட்டிருந்தார்.
The post டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.