
புதுடெல்லி,
டெல்லியின் முஸ்தாபாபாத் பகுதியில் 4 தளங்களை கொண்ட அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. கட்டிடம் முழுவதும் இடிந்து விழுந்ததில் பலர் சிக்கி கொண்டனர். அவர்களை மீட்கும் பணி நடந்தது. எனினும், கட்டிட விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருந்தன. மேலும், 14 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் 12 மணி நேரத்திற்கு மேலாக நீடித்து வந்தது. இந்த நிலையில் இத்துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் பட்டியலை டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த கட்டிட விபத்து சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்திருப்பதாகவும், அதில் மூன்று பெண்கள் மற்றும் நான்கு குழந்தைகள் உயிரிழந்திருப்பதாகவும், மேலும் 11 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்தவர்களில் கட்டிடத்தின் வீட்டு உரிமையாளரும் ஒருவர், அவர் 60 வயதான தெக்சின் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா தனது இரங்கலைத் தெரிவித்துடன், சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.