புதுடெல்லி,
70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கான தேர்தல் கடந்த 5-ந்தேதி நடந்து முடிந்தது. இந்த தேர்தலில், ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. என 3 முக்கிய கட்சிகள் மும்முனை போட்டியை ஏற்படுத்தி இருந்தன. ஆம் ஆத்மி வெற்றி பெற்றால் அது ஹாட்ரிக் வெற்றியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது. தொடக்கம் முதலே, பா.ஜ.க. பல்வேறு இடங்களில் முன்னிலை பெற்றது. ஆம் ஆத்மி கட்சி பின்னடைவை சந்தித்தது. இது அக்கட்சியினருக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் இதுவரை வெளியான தகவலின்படி, பா.ஜ.க. 47 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால், பா.ஜ.க. ஏறக்குறைய 26 ஆண்டுகளுக்கு பின்னர் டெல்லியில் ஆட்சியமைக்க உள்ளது. இந்த வெற்றியை பா.ஜ.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இதனிடையே, புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை, பா.ஜ.க. வேட்பாளர் பர்வெஷ் வர்மா 4,089 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். இந்நிலையில் டெல்லியின் முன்னாள் முதல்-மந்திரி சாஹிப் சிங்கின் மகனான பர்வேஷ் வர்மா, தற்போது டெல்லியின் புதிய முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
தேர்தல் வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பர்வேஷ் வர்மா, "இது என்னுடைய வெற்றி மட்டுமல்ல, பொய்களுக்குப் பதிலாக உண்மையைத் தேர்ந்தெடுத்த டெல்லி மக்களின் வெற்றி. என் மீது நம்பிக்கை வைத்த ஒவ்வொரு வாக்காளருக்கும் நான் பணிவுடன் நன்றி கூறுகிறேன்.
பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரின் வலுவான தலைமையின் கீழ், டெல்லியில் உண்மையான மாற்றத்தைக் கொண்டுவர நாங்கள் அயராது உழைப்போம்.
டெல்லியின் புதிய முதல்-மந்திரி யார் என்பதை பா.ஜ.க. தலைமை முடிவு செய்யும். கடந்த 11 ஆண்டுகளாக கெஜ்ரிவால் டெல்லியில் எந்த பணியும் செய்யவில்லை. டெல்லி மக்கள் மோடி மீது நம்பிக்கை வைத்துள்ளனர்" என்று தெரிவித்தார்.