டெல்லி : டெல்லியின் காற்று மாசு அளவு மிகவும் மோசமடைந்துள்ள நிலையில், பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இதற்கிடையே டெல்லியின் காற்று தரக்குறியீடு 400 புள்ளிகளை தாண்டும் வரை கட்டுப்பாடுகளை விதிக்காமல் காத்திருந்தது ஏன் என ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது டெல்லியில் கடந்த 3 நாட்களாக காற்று மாசு ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் காற்று மாசு 300-400 வரை இருக்கும் போது 3வது நிலை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கட்டுப்பாடுகளை விதிக்க 3 நாட்கள் தாமதம் ஏன் என்று கேள்வி எழுப்பினர். சில நாட்களில் நிலைமை சீராகும் என்றும் காற்று வீச வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததால் கட்டுப்பாடுகள் விதிப்பது தாமதமானதாக ஒன்றிய அரசு தெரிவித்தது. இதற்கு நீதிபதிகள், இது போன்ற தீவிரமான சூழ்நிலையில், வானிலை ஆய்வு மையத்தின் கருத்தை நம்பி யாராவது காத்திருக்க முடியுமா ? என்று கேள்வி எழுப்பினர். இதையடுத்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
The post டெல்லியின் காற்று தரக்குறியீடு 400 புள்ளிகளை தாண்டும் வரை கட்டுப்பாடுகளை விதிக்காமல் காத்திருந்தது ஏன்?: ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!! appeared first on Dinakaran.