புதுடெல்லி,
70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கான தேர்தல் பிப்ரவரி 5-ந்தேதி நடைபெற உள்ளது. பிப்ரவரி 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த தேர்தலில், ஆளும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. என 3 முக்கிய கட்சிகள் போட்டியிடுவதால் மும்முனை போட்டி நிலவுகிறது.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், டெல்லிக்கு தற்போது உண்மையான வளர்ச்சி தேவை என்றும், போலியான பிரசாரங்கள் தேவையில்லை என்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேஸ்புக்கில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "டெல்லியின் உண்மையான நிலவரம் பொதுமக்களின் கண் முன்னே உள்ளது. மோசமான கட்டுமானம், பணவீக்கம், வேலையின்மை, மாசுபாடு மற்றும் ஊழல் ஆகியவை டெல்லியில் நிலவி வருகின்றன.
டெல்லியை தொடச்சியாக 3 முறை ஆட்சி செய்த ஷீலா தீட்சித்தின் அரசாங்கத்தைப் போல், தற்போது டெல்லிக்கு உண்மையான வளர்ச்சி தேவைப்படுகிறது. மோடி மற்றும் கெஜ்ரிவாலின் போலியான பிரசாரங்கள் மக்களுக்கு தேவையில்லை" என்று தெரிவித்துள்ளார்.