
சென்னை,
ஐ.பி.எல். தொடரில் சென்னையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவரில் 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 183 ரன்கள் எடுத்தது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 77 ரன் எடுத்தார். சென்னை தரப்பில் கலீல் அகமது 2 விக்கெட் வீழ்த்தினார்.
தொடர்ந்து 184 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 25 ரன் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி பெற்றது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக விஜய் சங்கர் 69 ரன் எடுத்தார். டெல்லி தரப்பில் விப்ராஜ் நிஹாம் 2 விக்கெட் வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி 26 பந்தில் 30 ரன் (1 பவுண்டரி, 1 சிக்ஸ்) எடுத்து களத்தில் இருந்தார்.
சி.எஸ்.கே அணியின் தோல்விக்கு மெதுவாகவிளையாடியதே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கடைசி 5 ஓவர்களில் இலக்கை நோக்கி செல்வதற்கான அதிரடி ஆட்டத்தை கூட தோனி, விஜய் சங்கர் வெளிப்படுத்தவில்லை. இந்நிலையில், இந்த போட்டியில் மோசமாக விளையாடிய தோனி, இந்த தொடரில் முதல் வீரராக மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இந்த இன்னிங்ஸில் தோனி ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரியை மட்டும் விளாசி இருந்தார். ஆனால், அவரின் முதல் பவுண்டரி 19-வது பந்தில் தான் வந்தது. இந்த சீசனில் பேட்டிங் செய்த வீரர்களில் முதல் பவுண்டரியை அடிக்க அதிக பந்துகளை எடுத்து கொண்ட வீரராக தோனி பெயர் எடுத்துள்ளார். இப்படியொரு மோசமான சாதனையால் தோனி ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.