புதுடெல்லி:
லடாக் யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்கவேண்டும், அரசியலமைப்பின் 6-வது அட்டவணையில் லடாக்கை சேர்க்க வேண்டும், லே மற்றும் கார்கில் மாவட்டங்களுக்கு தனித்தனி மக்களவை தொகுதிகள் உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லடாக்கை சேர்ந்த காலநிலை ஆர்வலரும் கல்வி சீர்திருத்தவாதியுமான சோனம் வாங்சுக் தொடர்ந்து போராடி வருகிறார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் 21 நாட்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்.
இந்நிலையில், சோனம் வாங்சுக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி நோக்கி பேரணியாக வந்தனர். அவர்களை கடந்த மாதம் 30-ம் தேதி டெல்லி எல்லையான சிங்குவில் டெல்லி போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் அக்டோபர் 2-ம் தேதி விடுவித்தனர்.
அதன்பின்னர் டெல்லியில் உள்ள லடாக் பவனுக்கு வந்து சேர்ந்த அவர்கள், அங்கு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று நான்காவது நாளாக உண்ணாவிரத போராட்டம் தொடர்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இன்று மிகவும் சோர்வாக காணப்பட்டனர்.
இதற்கிடையே, வாங்சுக்கின் போராட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் ஆதரவு தெரிவித்துள்ளார். நேற்று இரவு அந்த நபர் தங்களை சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததாக வாங்சுக் கூறினார்.
இதுபற்றி வாங்சுக் மேலும் கூறியதாவது:
நேற்று இரவு ஒருவர் மூலிகை கொசு விரட்டியை எங்களுக்காக கொண்டு வந்தார். ஆனால் பிரதான வாயிலை தாண்டி உள்ளே வராமல் வெளியிலேயே நின்றுவிட்டார். சிசிடிவி கேமராவில் பதிவாக அவர் விரும்பவில்லை.
அவர், தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருப்பதாகவும் பா.ஜ.க.வுடன் நெருக்கமாக இருப்பதாகவும் கூறினார். லடாக் மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்வதாகவும் கூறினார். அதேசமயம், தன்னால் வெளிப்படையாக வந்து ஆதரவு தெரிவிக்க முடியாது என்று குறிப்பிட்டார்.
நேற்று முரளி மனோகர் ஜோஷியின் சிறப்பு செய்தியுடன் பா.ஜ.க. தலைவர் நரேஷ் வந்திருந்தார். இந்த சந்திப்புகள் எல்லாம், நீதி என்று வரும்போது மக்கள் தங்கள் சார்ந்த கட்சி, மதம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு இருப்பதை காட்டுகிறது. அவர்கள் கண்மூடித்தனமாக பின்பற்றுபவர்கள் அல்ல, அவர்களால் சரி, தவறுகளை வேறுபடுத்தி பார்க்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.