டெல்லி பேரவை தேர்தலில் ஆம்ஆத்மி வெற்றி பெற்றாலும் கெஜ்ரிவால் முதல்வராக முடியாது: காங்கிரஸ் மூத்த தலைவர் குற்றச்சாட்டு

4 hours ago 2

புதுடெல்லி: டெல்லி பேரவை தேர்தலில் ஆம்ஆத்மி வெற்றி பெற்றாலும் கெஜ்ரிவால் முதல்வராக முடியாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குற்றம்சாட்டினார். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் வகையில், தனது வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இந்தியா கூட்டணியில் ஆம்ஆத்மி இருந்தாலும் கூட, காங்கிரசுடன் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொள்ளப் போவதில்லை என்று அக்கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். முன்னதாக அவர் அளித்த பேட்டியில், ‘ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நான் முதல்வராக பதவியேற்பேன்’ என்று கூறினார்.

இருப்பினும், முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் மகனும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சந்தீப் தீட்சித், கெஜ்ரிவாலின் கருத்து குறித்து கூறுகையில், ‘உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் பதவிக்கு வரமுடியாது. வேறு யாரையாவது முதலமைச்சராக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள். ஒருவேளை கெஜ்ரிவால் டெல்லி முதல்வராக பதவியேற்றாலும், எந்த ஆவணத்திலும் கையெழுத்திட்டாலும், அவர் ஜாமீன் நிபந்தனைகளை மீறி மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும்’ என்றார். டெல்லி மதுபானக் கொள்கை ஊழலுடன் தொடர்புடைய பணமோசடி மற்றும் ஊழல் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐயால் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.

திகார் சிறையில் பல மாதங்கள் இருந்த அவர், உச்ச நீதிமன்றம் அளித்த சில நிபந்தனைகளுக்கு தற்போது ஜாமீனில் உள்ளார். இந்த நிபந்தனைகளின் அடிப்படையில் அவர் முதல்வர் அலுவலகம் மற்றும் தலைமை செயலகத்திற்குச் செல்ல முடியாது; மேலும் முதலமைச்சராக எந்த ஆவணத்திலும் கையெழுத்திட முடியாது. முன்னதாக நேற்று முன்தினம் துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா, மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவால் மீது வழக்குத் தொடர அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்திருந்தார். கடந்த 5ம் தேதி, கெஜ்ரிவால் மீது வழக்குத் தொடர துணை நிலை ஆளுநரிடம் அமலாக்கத்துறை அனுமதி கோரியது குறிப்பிடத்தக்கது.

The post டெல்லி பேரவை தேர்தலில் ஆம்ஆத்மி வெற்றி பெற்றாலும் கெஜ்ரிவால் முதல்வராக முடியாது: காங்கிரஸ் மூத்த தலைவர் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Read Entire Article