சென்னை: எஸ்டிபிஐ கட்சி மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் நேற்று வெளியிட்ட அறிக்கை: டெல்லியில் ஜங்புரா மதராஸி கேம்பில் மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து வரும் தமிழர்களை வெளியேற்றி, அவர்களின் வீடுகளை இடிக்க பாஜக தலைமையிலான டெல்லி மாநில அரசு முயற்சிப்பதாகவும், இதற்கு எதிராக அம்மக்கள் போராடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜங்புராவில் உள்ள மதராஸி கேம்ப், 50-60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் குடும்பங்களுடன் வசிக்கும் குடியிருப்புப் பகுதியாகும்.
இந்த பகுதியில் பாஜ தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக, 50 கி.மீ. தொலைவில் உள்ள நரேலாவில் மாற்று வீடுகள் ஒதுக்கப்படும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது மட்டுமின்றி வெறும் 189 பேருக்கு மட்டுமே அந்த வீடுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பாஜ அரசின் இடிப்பு நடவடிக்கைக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர். மதராஸி கேம்ப் ஒரு அங்கீகரிக்கப்பட்ட குடியிருப்புப் பகுதியாகும். எனவே, இடிப்புக்கு முன் மறுவாழ்வு வழங்கப்பட வேண்டும். இதன் அடிப்படையில், தமிழர்களின் கோரிக்கை நியாயமானது. ஆகவே, இவ்விவகாரத்தில் தமிழக முதல்வர் தலையிட்டு, புலம்பெயர் தமிழர்களின் வாழ்விடத்தைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மேலும், இவ்விவகாரத்தில் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து எஸ்டிபிஐ கட்சி போராடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post டெல்லி ஜங்புராவில் தமிழரின் வீடுகளை இடிக்க பா.ஜ. அரசு முயற்சிக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையிட எஸ்டிபிஐ வலியுறுத்தல் appeared first on Dinakaran.