சென்னை: டெல்லி சென்று பாஜ தலைவர்களிடம் என்ன பேசினீர்கள் என்று நேற்று சட்டப்பேரவைக்கு வந்த செங்கோட்டையனிடம் அதிமுக எம்எல்ஏக்கள் பலரும் கேள்வி எழுப்பினர். ஆனால், அவர் புன்னகையை பதிலாக அளித்து சமாளித்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் திடீரென ெடல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அமித்ஷாவை சந்தித்த பின் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறுகையில், தமிழக மக்கள் நல திட்டங்கள் குறித்து கோரிக்கை வைத்ததாகவும், அதிமுக பாஜ கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை என்றும் கூறினார்.
ஆனால், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிமுக – பாஜ கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் நல்ல முடிவு வெளியாகும் என்று கூறி ரகசியத்தை போட்டு உடைத்தார். இந்த பரபரப்புக்கு இடையே அதிமுக முன்னாள் அமைச்சரும் மூத்த நிர்வாகியுமான செங்கோட்டையன் திடீரென டெல்லிக்கு 3 நாட்களுக்கு முன் சென்றார். அப்போது அவரும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனையும் சந்தித்து பேசினார். தமிழகத்தில் இருந்து செங்கோட்டையன் டெல்லி சென்றது அதிமுக கட்சி தலைமை அலுவலகத்திற்கோ அல்லது கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கோ தெரியவில்லை. ரகசியமாக சென்று திரும்பினார்.
இதுகுறித்து விசாரித்தபோது, அமித்ஷாவின் சில கோரிக்கைகளை எடப்பாடி பழனிசாமி நிராகரித்துவிட்டார். கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட சசிகலா, டிடிவி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் மீண்டும் இணைந்து செயல்பட முடியாது என கூறிவிட்டார். இதன் காரணமாகவே ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையனை டெல்லிக்கு அழைத்து அதிமுக-பாஜ கூட்டணிக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. கூட்டணிக்கு ஒத்து வரவில்லை என்றால், எடப்பாடியை கழற்றிவிட்டுவிட்டு அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் தலைமையில் அதிமுகவை உடைத்து கூட்டணியை ஏற்படுத்தவும் டெல்லி பாஜ தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவை 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு நேற்று கூடியது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் சட்டப்பேரவைக்கு வந்தனர். செங்கோட்டையன் டெல்லி சென்று வந்தது ஏன் என்பது குறித்து அறிய, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்வம் காட்டினர். ஆனால் காலை 9.30 மணிக்கு பேரவைக்கு வந்த செங்கோட்டையன், யாரிடமும் அதிகமாக பேசாமல் அமைதியாக இருந்தார். எடப்பாடி பழனிசாமி பேரவைக்கு வந்தபோது, அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்றனர். ஆனால் செங்கோட்டையன் மட்டும் எழுந்து நிற்காமல் அவரது இருக்கையிலேயே அமர்ந்து இருந்தார்.
பின்னர் கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தபோது, எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ, கே.பி.அன்பழகன், கோவிந்தசாமி, அம்மன் அர்ஜூனன் ஆகியோர் செங்கோட்டையன் இருக்கை அருகே வந்து டெல்லி பயணம் தொடர்பாக பேச்சு கொடுத்தனர். அவர்களிடம் செங்கோட்டையன் ஓரிரு வார்த்தை மட்டும் பேசிவிட்டு, புன்னகையை மட்டும் பதிலாக கூறி அமைதியாக இருந்தார். இதனால் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இடையே ஒரு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறைக்கு செல்வதை செங்கோட்டையன் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார். சபாநாயகர் அறைக்கு சென்றுவிட்டு, 9.30 மணிக்கு அவை நடவடிக்கையில் கலந்து கொள்வார். ஆனால் நேற்று சபாநாயகர் அறைக்கு செல்வதை தவிர்க்கும் வகையில் காலை 9.25 மணிக்கு பேரவைக்கு நேராக வந்தார்.
காதை மூடிக்கொண்ட ஓபிஎஸ்
டெல்லி சென்று பாஜ தலைவர்களை சந்தித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை அதிமுக எம்எல்ஏக்கள் பேரவையில் நேற்றுதான் நேரடியாக சந்திக்கும் வாய்ப்புக்கு கிடைத்தது. அப்போது, செங்கோட்டையன் இருக்கை அருகே பல அதிமுக எம்எல்ஏக்கள் வந்து, டெல்லி சென்றது ஏன்? கேள்வி எழுப்பினர். அதிமுக எம்எல்ஏக்கள் கடம்பூர் ராஜு, தளவாய் சுந்தரம் ஆகியோர் செங்கோட்டையன் அருகே இருபுறமும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அதிமுக எம்எல்ஏ தனபால் பேரவைக்கு வராததால், அந்த இருக்கையில் அமர்ந்து தளவாய் சுந்தரம் எம்எல்ஏ செங்கோட்டையனிடம் பேசிக் கொண்டிருந்தார். தனபால் இருக்கை அடுத்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்து இருந்தார். திடீரென சத்தமாக பேசிய அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரத்தை ஓ.பன்னீர்செல்வத்தை திரும்பி பார்த்தார். ஓபிஎஸ் திரும்பி பார்த்ததும் அமைதியான தளவாய் சுந்தரம், செங்கோட்டையனிடம் மெதுவாக பேசினார். இருவரையும் பார்த்த ஓ.பன்னீர்செல்வம், நீங்கள் பேசுங்கள் என சைகை காட்டிவிட்டு காதுகளை மூடிக்கொண்டார்.
நயினார் உற்சாகம்
பாஜ சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரனிடம் அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ ஆகியோர் சென்று பேச்சு கொடுத்தனர். இது பேரவையில் இருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதுபற்றி விசாரித்தபோது, எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் ஆகியோர் டெல்லி சென்று வந்த பிறகு பாஜ உறுப்பனிர் நயினார் நாகேந்திரன் டெல்லி மேலிட தலைவர்களை சந்தித்ததாக கூறப்படுகிறது. நயினார் நாகேந்திரன் தமிழக பாஜ தலைவராக வர வாய்ப்பு இருப்பதாக அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதனாலேயே அதிமுக எம்எல்ஏக்கள் அவரை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. நயினார் நாகேந்திரன் நேற்று சட்டப்பேரவைக்கு சிறிது தாமதமாக வந்தபோதும், முன் வரிசையில் இருந்த அனைத்துக்கட்சி தலைவர்களையும் பார்த்து வணக்கம் தெரிவித்து மிகவும் உற்சாகமாக காணப்பட்டார்.
The post டெல்லி சென்று பாஜ தலைவர்களிடம் என்ன பேசினீர்கள்..? செங்கோட்டையனை ரவுண்டு கட்டிய அதிமுக எம்எல்ஏக்கள் appeared first on Dinakaran.