புதுடெல்லி,
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபையின் தற்போதைய பதவிக்காலம் வருகிற 23-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனை முன்னிட்டு கடந்த மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று (புதன்கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது.
மொத்தம் உள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. 70 தொகுதிகளிலும் மொத்தம் 699 பேர் போட்டியில் உள்ளனர். இதில் ஆம் ஆத்மி, பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நடக்கிறது.
டெல்லியின் முதல்-மந்திரி அதிஷி கல்காஜி தொகுதியிலும், முன்னாள் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள். அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து பா.ஜனதா சார்பில் பர்வேஷ் வர்மாவும், காங்கிரஸ் சார்பில் சந்தீப் தீட்சித்தும் மோதுகிறார்கள். இவர்கள் 2 பேரும் முன்னாள் முதல்-மந்திரிகளின் மகன்கள் ஆவர். சந்தீப் தீட்சித், டெல்லியில் நீண்டகாலம் முதல்-மந்திரியாக இருந்த ஷீலா தீட்சித்தின் மகன் ஆவார்.
இதைப்போல கல்காஜி தொகுதியில் அதிஷியை எதிர்த்து பா.ஜனதா சார்பில் ரமேஷ் பிதூரியும், காங்கிரஸ் சார்பில் அல்கா லம்பாவும் நிற்கிறார்கள். ஆம் ஆத்மியின் செல்வாக்கு மிக்க தலைவர்களை எதிர்த்து பா.ஜனதாவும் வலுவாகவே போட்டியாளர்களை நிறுத்தி உள்ளது.
இந்த சூழ்நிலையில் இன்று பலப்பரீட்சை நடக்கிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6.30 மணிவரை நடக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்துள்ளது. பாதுகாப்பு பணிகளை காவல்துறை தீவிரப்படுத்தி உள்ளது.
தேர்தலை முன்னிட்டு டெல்லிக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் செயல்படாது. மதுபானக்கடைகள் மூடியிருக்கும். ஆஸ்பத்திரி, மருந்தகம் போன்ற அத்தியாவசியமான தேவைகளுக்கான நிறுவனங்கள் தவிர மற்ற அனைத்தும் மூடப்படுகிறது.
தேர்தலுக்காக மக்களின் போக்குவரத்துக்கு பஸ் மற்றும் மெட்ரோ ரெயில்கள் தங்கு தடையின்றி இயக்கப்படும். மெட்ரோ போக்குவரத்து அதிகாலை 4 மணிக்கு தொடங்கப்படுகிறது.
தலைநகரில் தேர்தல் நடப்பதால் பாதுகாப்பில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணியில் 30 ஆயிரம் டெல்லி போலீசார், 22 ஆயிரம் துணை ராணுவப்படையினர் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் இடங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. ஏ.ஐ. கேமராக்களும் இதில் பயன்படுத்தப்படுகின்றன. ரோந்து பணியில் போலீசாருடன் சீருடை அல்லாத பணியாளர்களும் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.