புதுடெல்லி,
டெல்லியில் நாளை மறுநாள் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதில் ஆளும் ஆம் ஆத்மி, பா.ஜனதா, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக தீவிர பிரசாரம் நடந்து வருகிறது. கட்சிகள் அனைத்தும் ஒன்றின் மீது மற்றொன்று வைக்கும் குற்றச்சாட்டுகளால் பிரசார கூட்டங்களில் அனல் பறக்கிறது. இந்த பிரசாரம் இன்று (திங்கட்கிழமை) மாலையுடன் ஓய்கிறது. எனவே தலைநகர் முழுவதும் இறுதிக்கட்ட பிரசாரம் வேகமெடுத்து உள்ளது. பா.ஜனதா, ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த மூத்த தலைவர்கள் மாநிலத்தில் முகாமிட்டு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லியில் இறுதிக்கட்ட பிரசாரத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நூதன முறையில் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். அதாவது, ஆம் ஆத்மி ஆட்சியில் டெல்லியின் கல்வி நிலை குறித்து மரத்தடியில் அமர்ந்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது மாணவர்களிடம் பேசிய அவர், ஆம் ஆத்மி அரசு தனது நற்பெயரை பாதுகாக்க, நல்ல மதிப்பெண்கள் பெறும் மாணவர்களை மட்டுமே ஒன்பதாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பிற்கு செல்ல அனுமதிக்கிறது என்று நான் கேள்விப்பட்டேன். கற்றல் முடிவுகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, ஆம் ஆத்மி மாணவர்கள் தேர்வுகளை எழுதும் வாய்ப்பை மறுத்து உண்மையான முன்னேற்றத்தை விட பிரசாரத்திற்கு முன்னுரிமை அளிக்கின்றனர். ஆம் ஆத்மி கட்சி தனது கல்வி மாதிரியை வெற்றிகரமாக காட்டுவதற்காக மாணவர்களின் எதிர்காலத்தை சமரசம் செய்வதாக குற்றம் சாட்டினார். அரசியலை காட்டிலும் கல்வியே பிரதானமாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.