ஐதராபாத்: தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் ரூ.10.75 கோடிக்கு வாங்கப்பட்டார். ஆனால் தற்போது வரை ஒரு போட்டியில் கூட அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த ஐபிஎல் சீசன்களில் யார்க்கர் பந்துகளை வீசி பேட்ஸ்மேன்களை திணறடித்து யார்க்கர் கிங் என பெயரெடுத்த நடராஜனை டெல்லி அணி ஒரு போட்டியில் கூட களமிறக்காதது தமிழக ரசிகர்களை சோகமடைய செய்தது.
இதுகுறித்து ரசிகர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் என பலரும் சமூக வலைதளங்களில் விமர்சனங்களை முன் வைத்தனர். இந்த நிலையில், நேற்று நடந்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி நடராஜனுக்கு வாய்ப்பு அளித்தது. இதனால் குஷியான ரசிகர்கள் எப்படியும் அவர் இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசி தனது திறமையை நிரூபிப்பார் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வண்ணம் துரதிர்ஷ்டவசமாக போட்டி மழையால் கைவிடப்பட்டதால் நடராஜனால் ஒரு பந்து கூட வீச முடியவில்லை. அதனால் ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில் அடுத்து வரும் போட்டிகளில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா அல்லது பெயருக்கு இந்த ஒரு கண் துடைப்பு வாய்ப்புடன் நடராஜன் மீண்டும் அணியிலிருந்து நீக்கப்படுவாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. முன்னதாக ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் முதல் இன்னிங்ஸ் முடிந்ததுமே மழை பெய்ததால் டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் பந்துவீச முடியவில்லை.
முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி கேப்டன் கம்மின்ஸின் பந்துவீச்சில் நிலைகுழைந்தது.
ஸ்டப்ஸ் ஓரளவுக்கு கைகொடுக்க அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கருண் நாயர், ராகுல், கேப்டன் அக்ஸர் பட்டே ஆகியோ படுமோசமான பேட்டிங் ஆடியதால் டெல்லி அணியால் ரன் குவிக்க முடியவில்லை. மிக குறைவான இலக்கை நிர்ணயித்திருந்த டெல்லி அணியை, சன்ரைசர்ஸ் அணி எப்படியும் வீழ்த்திவிடும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் மைதானத்தில் காத்திருந்தனர். ஆனால் சன்ரைசர்ஸ் அணி பேட்ஸ்மேன்களை ஒரு பந்தை கூட சந்திக்க விடாமல் மழை சோதித்தது. மழை நின்றதும் போட்டி தொடங்கும், நடராஜன் பந்துவீச்சை பார்த்துவிடலாம் என்ற ஆசையுடன் மைதானத்தில் காத்திருந்த ரசிகர்களை மழை மொத்தமாக ஏமாற்றியது. ஒரு கட்டத்தில் 5 ஓவர்களில் 42 ரன்கள் என்ற இலக்கு சன்ரைசர்ஸ் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால், அதன் பின் மீண்டும் மழை பெய்தது. தொடர்ந்து தீவிரமாக மழை பெய்ததால் போட்டியை மீண்டும் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதை அடுத்துப் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் டெல்லி கேப்பிடல்ஸ் அணி தோல்வியின் பிடியிலிருந்து தப்பியது. இதையடுத்து இரு அணிகளுக்கு தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டன. அதனால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பையும் சன்ரைசர்ஸ் இழந்தது.
தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு 3 லீக் போட்டிகள் மட்டுமே மீதமுள்ள நிலையில் நடராஜன் விளையாடுவாரா, அல்லது அவருக்கு வாய்ப்பு மீண்டும் மறுக்கப்படுமா என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்கமுடியவில்லை. டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் முகேஷ்குமார் பந்துவீச்சு எடுபடாத நிலையில் அவருக்குப் பதிலாக தான் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்தநிலையில் அடுத்து வரும் போட்டிகளில் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கவேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
The post டெல்லி-ஐதராபாத் ஆட்டம் ரத்து; மழையால் வசப்படாத வாய்ப்பு `யார்க்கர் கிங்’ ரசிகர்கள் சோகம்: அடுத்த போட்டியில் களமிறக்கப்படுவாரா? appeared first on Dinakaran.