‘‘ஹனிபீ மாவட்டத்தில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட யாருக்கு சீட் என்று முடிவு செய்ய இலைக்கட்சியில் தனி டீம் சர்வே பண்ணிக்கிட்டு இருக்கிறதாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘ஹனிபீ மாவட்ட இலைக்கட்சிக்காரர்களில் சட்டமன்ற தேர்தலில் யாருக்கு சீட்டு என்பதை முடிவு செய்ய தனி டீம் வைத்து சர்வே செய்யும் பணி கடந்த சில மாதங்களாக நடந்து வருது.. இதில் ஹனிபீ மாவட்டத்தில் பிக் பாண்ட் தொகுதி, இரண்டெழுத்து தொகுதிகளில் இலைக்கட்சி சார்பில் போட்டியிட பயங்கர போட்டி நிலவுகிறதாம்.. சில முக்கிய கட்சி நிர்வாகிகள் இப்போதே கட்சியின் மாவட்ட செயலாளர்களை தாஜா செய்யும் வேலையில் இறங்கியுள்ளார்களாம்..
மேலும், சர்வே டீமிடம் தங்களது பெயரை தலைமைக்கு பரிந்துரைக்குமாறு கூறி, சில லகரங்களை அள்ளி வீசியுள்ளனராம்.. இது ஒருபுறமிருக்க, பலாப்பழக்காரர் தரப்போ, இலைக்கட்சி யாருக்கு என்ற விவகாரம் மீண்டும் விசுவரூபம் எடுத்ததும், இலை சின்னத்தை முடக்கி விட்டால் கட்சி மீண்டும் தங்கள் பக்கம் வந்து விடும் என கனவு கண்டு வருகிறாராம்… அவ்வப்போது பண்ணை வீட்டில் ஆதரவாளர்களை அழைத்து, இந்த தகவலை உற்சாகமாக கூறி வருகிறாராம்.. வரும் பொங்கல் பண்டிகை தினத்தில் பலாப்பழக்காரரின் பிறந்தநாள் வருது..
அதற்காக இப்போதே ஹனிபீ மாவட்டத்தில் பல இடங்களில் பிரமாண்ட பிளக்ஸ் பேனர்களை பலாப்பழக்காரரின் ஆதரவாளர்கள் வைச்சிட்டு வர்றாங்களாம்.. மாவட்டத்தில் மீண்டும் பலாப்பழக்காரர் அலை வீசி வருவதாக கூறுகின்றனர். உண்மை நிலை தெரியாமல் இப்படி பேசுறாங்களேப்பா… வர்ற தேர்தலுக்கு பிறகு நிலைமை என்னாகப் போகுதோன்னு தெரியாம கிடக்கு… இதுல இந்த கோஷ்டி வேற காமெடி பண்ணிக்கிட்டு… என இலைக்கட்சி தரப்பினர் கிண்டலாக பேசி வருகின்றனர்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘முறைகேடுகளை கண்டுபிடிக்க அமைக்கப்பட்ட சமூக தணிக்கை குழுவே கைநீட்டுவதால் மாஜி ஊராட்சி தலைவர்கள் புலம்புறாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கடல் ஊரில் உள்ள புகழ்பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ள ஒன்றியத்தில் 51 பஞ்சாயத்துக்கள் இருக்கு.. அங்கு ஊராட்சி மன்ற தலைவர்களாக இருந்தவர்களின் பதவிக்காலம் சில தினங்களுக்கு முன் முடிவடைந்து விட்டது. இவர்களது பணி காலத்தில் ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலை திட்டப்பணிகள் பல நடந்த நிலையில், முறைகேடுகளை கண்டறிய சமூக தணிக்கை குழு அமைக்கப்பட்டதாம்..
கையெழுத்து முறைகேடு, வேலைக்கு வராதவர்களுக்கு சம்பளம், போலி பணி அட்டை உள்ளிட்ட பல்வேறு சோதனைகளை மேற்கொண்ட நிலையில், சில முறைகேடுகளை கண்டுபிடித்தார்களாம்.. அதனை குறைத்து மதிப்பீடு செய்து அறிக்கை கொடுக்க, கையூட்டுகள் பெறுகிறார்களாம்.. இதனால் பதவி காலம் முடிந்த ஊராட்சி மாஜி தலைகளும், பணியாளர்களும் அதிகம் கவலையில் உள்ளார்களாம்.. முறைகேடுகள் கண்டறிய செல்பவர்களே கைநீட்டினால் எப்படி என்ற புலம்பல் சத்தம் ஊராட்சியில் அதிகம் ஒலிக்கிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘விலகி சேர்ந்ததால் இலை கட்சியில் மதிப்பில்லாமல் அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை இழுப்பதற்கான வேலையில் வைத்தியானவர் டீம் இறங்கியிருக்காமே..’’ என்றார் பீட்டர் மாமா.‘‘நெற்களஞ்சியம் உள்ளிட்ட டெல்டா மாவட்டத்தில் தேனிக்காரர் அணி, குக்கர் கட்சியில் இருந்து விலகிய நிர்வாகிகள் மீண்டும் இலை கட்சிக்கு திரும்பினாங்க.. ஆரம்பத்தில் அவர்களுக்கு ‘செம கவனிப்பு’ நடந்துருக்கு.. ஆனால் போக போக அந்த கவனிப்பும் குறைந்து கொண்டே சென்றதாம்.. இலை கட்சியில் உள்ள சீனியர் நிர்வாகிகள் முதல் 2வது கட்ட நிர்வாகிகள் கூட அணி தாவி வந்தவர்களை மதிப்பது இல்லையாம்..
இதனால் அவர்கள் வெளியே சொல்ல முடியாமல் கடும் அதிருப்தியில் இருக்காங்களாம்.. இந்த தகவல் வைத்தியானவருக்கு தெரிய வந்திருக்கு.. இதனால் இலை கட்சியில் அதிருப்தியில் உள்ள டெல்டா மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகளை 2026 தேர்தலுக்கு முன்னதாக மீண்டும் தங்கள் பக்கம் இழுப்பதற்கான திரைமறைவான வேலையில் வைத்தியானவர் டீம் தீவிரமாக களமிறங்கி இருக்காம்.. இந்த டாப்பிக் தான் தற்போது பரவலாக பேசப்பட்டு வருது..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பாதர், சன் சண்டைக்கு அப்புறமா, ப்ரூட் பார்ட்டி தொண்டர்கள் யார் பாக்கம் போறதுன்னு தெரியாம தவியாய் தவிக்குற நிலைக்கு வந்துட்டாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘ப்ரூட் பார்ட்டியில கொஞ்ச நாளுக்கு முன்னாடி, ஒரு மீட்டிங்ல பாதருக்கும், சன்னுக்கும் மேடையிலேயே சண்டை வந்துச்சு.. இதெல்லாம் சமூக வலைதளங்கள்ல வைரலாக பரவுச்சு.. அதுக்கு பிறகு பாதர், சன் இரண்டு அணியாக ஆங்காங்கே பிரியத் தொடங்குனாங்க.. இந்த அணி பிரிவு, குயின்பேட்டை மாவட்டத்துலயும் தொடங்கியிருக்குதாம்..
குயின்பேட்டைய பொறுத்தவரைக்கும், ஏற்கனவே முருகக் கடவுள் பெயர் கொண்டவரு செக்ரட்ரியாக இருந்தாரு.. அப்புறம் பெயரில் உலகத்தை வெச்சிருக்கவரும் செக்ரட்ரியாக நியமிக்கப்பட்டாரு.. அப்புறம் சன் ஆதரவாளர் திரும்பவும் அந்த செக்ரட்ரி பதவிய வாங்குனாரு. ஏற்கனவே இப்படி கோஷ்டி பூசல் இருந்த நிலையில, பாதர், சன் சண்டைக்கு அப்புறமாக, குயின்பேட்டை மாவட்டத்துல இந்த அணி பிரிவு இன்னும் வலுக்கத் தொடங்கியிருக்குதாம்.. இதனால ப்ரூட் பார்ட்டியோட தொண்டர்கள் யார் பக்கம் போறதுன்னு தெரியாம தவியாய் தவிக்குறாங்களாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.
The post டெல்டாவில் இலைக்கட்சி அதிருப்தி நிர்வாகிகளை இழுக்க வைத்தியானவர் டீம் களமிறங்கியது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.