திருச்சி: டெல்டா மாவட்டங்களில் நேற்று இரவு காற்று, இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலுக்குள் தண்ணீர் புகுந்ததால் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர். அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதன் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஒரு சில பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் பல இடங்களில் நேற்று இரவு மழை பெய்தது. கடலோர மாவட்டமான மயிலாடுதுறையில் கடந்த ஒரு வாரமாக அக்னி வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று மாலை மாவட்டம் முழுவதும் திடீரென சூறை காற்று, மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.
திடீர் மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலுக்குள் மழை நீர் புகுந்தது. முழங்கால் அளவுக்கு தேங்கிய மழைநீரில் பக்தர்கள் சிரமப்பட்டு சாமி தரிசனம் செய்தனர். நாகை மாவட்டத்தில் நள்ளிரவில் பலத்த காற்றுடன் மழை கொட்டியது. திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம், நீடாமங்கலம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இரவு 10 மணி முதல் பலத்த மழை பெய்தது. கரூரில் 8 மணி முதல் 9 மணி வரை மின்னலுடன் மழை பொழிந்தது. அதேபோல் புதுக்கோட்டை, திருமயம், அரிமளம் உள்பட மாவட்டம் முழுவதும் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தது.
திருச்சி நகரில் இரவு 7 மணிக்கு திடீரென மழை பெய்ய தொடங்கியது. இடி, மின்னலுடன் பெய்த மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. டெல்டா மாவட்டங்களில் இடி, மின்னல், சூறை காற்றுடன் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
The post டெல்டா மாவட்டங்களில் காற்று, இடி, மின்னலுடன் பலத்த மழை: மயிலாடுதுறை கோயிலுக்குள் தண்ணீர் புகுந்தது appeared first on Dinakaran.