மலாகா: டென்னிஸ் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்து, ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ள ரபேல் நடால், பேர்வெல் மேட்ச்சாக நடந்த, டேவிஸ் கோப்பைக்கான காலிறுதிப் போட்டியில் நெதர்லாந்து வீரரிடம் நேர் செட்களில் தோல்வியை தழுவினார். ஸ்பெயின் நாட்டை சேர்ந்த டென்னிஸ் ஜாம்பவான் ரபேல் நடால் (38), டென்னிஸ் அரங்கில் முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர். 22 முறை கிராண்ட் ஸ்லாம் வென்றுள்ள இவர், பிரெஞ்ச் ஓபன் போட்டிகளில் 14 முறை வெற்றி வாகை சூடியவர். ஸ்பெயினின் மலாகா நகரில் நடந்து வரும் டேவிஸ் கோப்பை போட்டிகளுக்கு பின் ஓய்வு பெறுவதாக ரபேல் நடால் அறிவித்தது, டென்னிஸ் உலகை அதிர்ச்சி அடையச் செய்தது.
இதையடுத்து, ரபேல் நடாலுக்கு டென்னிஸ் உலகின் மற்றொரு ஜாம்பவான் வீரர் ரோஜர் பெடரர் உள்ளத்தை உருக்கும் வகையில் சமீபத்தில் பிரியாவிடை கடிதம் எழுதி நெகிழ்ச்சி அடையச் செய்தார். இந்நிலையில், மலாகா நகரில் நேற்று நெதர்லாந்து நாட்டின் போடிக் வான்டி ஸந்சுல்ப் உடனான காலிறுதிப் போட்டியில் ரபேல் நடால் களமிறங்கினார். முதல் செட்டில் நடால் சிறப்பான சில ஷாட்டுகளை அடித்து கடுமையாக போராடியபோதும், 4-6 என்ற கணக்கில் அந்த செட்டை இழந்தார். அதைத் தொடர்ந்து நடந்த இரண்டாவது செட் ஆட்டத்தின்போது, நடாலிடம் எப்போதும் காணப்படும் சுறுசுறுப்பும் வீரியமும் குறைந்து போய் இருந்தது. இதனால், அந்த செட்டையும் 4-6 என்ற கணக்கில் நடால் இழந்தார். இதையடுத்து, காலிறுதியில் போடிக் வென்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த போட்டிக்கு முன், நடாலும், போடிக் வான்டியும் இரு முறை மோதியுள்ளனர்.
இரு முறையும் ஒரு செட்டை கூட விட்டுத் தராமல் நடால் அபாரமாக ஆடி வெற்றி பெற்றிருந்தார். இதற்கு முன், டேவிஸ் கோப்பை ஒற்றையர் போட்டிகளில் 30 முறை நடால் களமிறங்கி உள்ளார். 2004ல் நடந்த முதல் போட்டியில் செக் வீரர் ஜிரி நோவக்கிடம் நடால் தோற்றார். அதன் பின் நடந்த 29 போட்டிகளிலும் நடாலே தொடர்ச்சியாக வெற்றி வாகை சூடினார். டென்னிஸ் அரங்கில், இது மிக அரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. நேற்றைய தோல்வி, டேவிஸ் கோப்பை வரலாற்றில் நடாலின் இரண்டாவது தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது. பேர்வெல் போட்டியில் நடால் தோற்றதை கண்டு, ஸ்பெயின் நாட்டு ரசிகர்கள் கண் கலங்கினர்.
The post டென்னிஸ் உலகின் முடி சூடா மன்னன் நடால் பேர்வெல் போட்டியில் தோற்றதால் கண் கலங்கிய டென்னிஸ் ரசிகர்கள்: டேவிஸ் காலிறுதியில் நெதர்லாந்து வீரர் வெற்றி appeared first on Dinakaran.