கறவை மாடுகளுக்கு ஏற்படும் சில நோய்கள் பால் சுரப்பைப் பாதிப்பதுடன், பல்வேறு உப விளைவுகளையும் ஏற்படுத்தும். சில நோய்கள் முற்றி விரும்பத்தகாத விளைவுகளும் ஏற்படும். இத்தகைய நோய்கள் வந்தால் சில மூலிகை மருத்துவங்களை முதலுதவி சிகிச்சையாக கொடுக்கலாம். கறவை மாடுகளைத் தாக்கும் முக்கியமான நோய்களுக்கு சில மருத்துவ முறைகளைப் பார்ப்போம்.
மடி வீக்க நோய்
கறவை மாடுகளைத் தாக்கும் முக்கிய நோய்களில் ஒன்று மடி வீக்க நோய். இந்த நோய் பெரும்பாலும் நுண்கிருமித் தொற்று மூலமாகவே ஏற்படுகிறது. மாட்டின் மடியானது வீக்கமாகவும், கடினத்தன்மையுடனும், வெப்பம் அதிகரித்தும் காணப்படும். பாதிக்கப்பட்ட கால்நடைகளில் பாலானது திரிந்து வெள்ளையாகவோ மஞ்சள் அல்லது ரத்தம் கலந்தோ காணப்படும். இந்நோய் தாக்காமல் இருக்கும் கறவை மாட்டின் மடியினை நன்கு கழுவி, சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும். நோய் வந்தால் கீழ்க்காணும் முதலுதவி மூலிகை மருத்துவத்தை நாடலாம். சோற்றுக்கற்றாழை – 200 கிராம், மஞ்சள் பொடி – 50 கிராம், சுண்ணாம்பு – 5 கிராம் ஆகியவற்றை ஆட்டுக்கல் உரலில் இட்டு நன்றாக, கெட்டியாக அரைக்க வேண்டும். பின்னர் ஒரு கை அளவு எடுத்து நீர் விட்டு கரைத்து, நீர்த்த நிலையில் கறவை மாடுகளின் மடிப்பகுதி முழுவதும் நன்றாக தடவ வேண்டும். மடி வீக்கம் குறையும் வரை இந்த முறையில் ஒரு நாளைக்கு 10 முறை பூச வேண்டும்.
வயிறு உப்புசம்
முறையான தீவனங்களை சரியாக சாப்பிடாததால் கறவை மாடுகளுக்கு உப்புசம் அல்லது நுரையோடு கூடிய வயிறு உப்புசம் ஏற்படும். இந்த வகையான உப்புசமானது எளிதில் செரிக்கக்கூடிய தானிய வகை உணவு மற்றும் ஈரமான பசுந்தீவனங்கள் அதிகமாக உண்பதால் ஏற்படுகிறது. இதனை மூலிகை முறையில் குணப்படுத்த வெற்றிலை – 10, பிரண்டை – 10 கொழுந்து, வெங்காயம் – 15 பல், இஞ்சி – 100 கிராம், பூண்டு – 15 பல், மிளகு – 10 எண்ணிக்கை, சின்ன சீரகம் – 25 கிராம், மஞ்சள் – 10 கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில் சின்ன சீரகம் மற்றும் மிளகினை இடித்துக்கொள்ள வேண்டும். பின்னர் மற்ற பொருட்களோடு கலந்து அரைத்து, இக்கலவையை 200 கிராம் பனை வெல்லத்துடன் கலந்த பின் சிறு சிறு உருண்டைகளாக பிரித்து கல் உப்பு ( 100 கிராம்) தொட்டு மாடுகளின் நாக்கின் மேல் தடவி ஒரே வேளையில் அனைத்து உருண்டைகளையும் உள்ளே செலுத்த வேண்டும்.
கழிச்சல்
வால் மற்றும் பின்னங்கால்களில் சாணக்கறை படிந்து காணப்படுவதும், தொடர்ந்து மாடுகள் கழிவதுமே இந்த கழிச்சல் நோய்க்கான அறிகுறி. இந்த நோயால் உடலிலுள்ள நீர்ச்சத்து, தாது உப்புகள் அதிகமாக வெளியேறி கன்றுகளும், மாடுகளும் சோர்ந்து காணப்படும். இதைக் குணப்படுத்த ஒரு மாட்டுக்கு அல்லது மூன்று கன்றுகளுக்கு சின்ன சீரகம் 10 கிராம், கசகசா 10 கிராம், வெந்தயம் 10 கிராம், மிளகு 5 எண்ணிக்கை, மஞ்சள் 5 கிராம், பெருங்காயம் 5 கிராம் ஆகியவற்றை நன்கு கருகும் வரை வறுத்து, நீர்தெளித்து இடித்துக்கொள்ள வேண்டும். மேலும் வெங்காயம் 2 பல், பூண்டு 2 பல், கறிவேப்பிலை 10 இலை, பனைவெல்லம் 100 கிராம் ஆகியவற்றை தனியாக நன்கு அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த இரு கலவைகளையும் கலந்து சிறுசிறு உருண்டைகளாக்கி 100 கிராம் கல் உப்பில் தோய்ந்தெடுத்து மாட்டின் நாவின் சொரசொரப்பான மேல்பகுதியில் தேய்த்த வண்ணம் ஒரே வேளையில் உள்ளே செலுத்த வேண்டும்.
விஷக்கடி
விஷத்தன்மையுள்ள உயிரினங்களான தேள், குளவி, வண்டு, பூரான், அரணை மற்றும் சிறு பாம்புக் கடியினால் தோலில் தடிப்பு, உடல் வீக்கம், வயிறு உப்புசம், வாயில் நீர் வடிதல், முச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் தென்படும். இந்த அறிகுறிகள் இருந்தால் உப்பு – 15 கிராம், தும்பை இலை – 15 எண்ணிக்கை, சிரியா நங்கை (இலை), (நில வேம்பு)-15 எண்ணிக்கை, மிளகு-10 எண்ணிக்கை, சீரகம் -15 கிராம், வெங்காயம்-10 பல், வெற்றிலை-5 எண்ணிக்கை, வாழைப்பட்டை சாறு-50 மி.லி. எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் சின்ன சீரகம், மிளகினை இடித்துக்கொள்ள வேண்டும். பின்பு மற்ற பொருட்களுடன் சேர்த்து அரைத்து இக்கலவையை சிறு உருண்டைகளாக 100 கிராம் பனை வெல்லம் கலந்து உப்பில் தொட்டு நாக்கின் மேல் தேய்த்து ஒரே வேளையில் அனைத்து உருண்டைகளையும் உள் செலுத்த வேண்டும்.
The post கறவை மாடுகளைத் தாக்கும் நோய்களும்…சில மூலிகை சிகிச்சைகளும்! appeared first on Dinakaran.