டெண்டர் விடப்பட்டு 4 ஆண்டுகளாகியும் தாம்பரம் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி தாமதம்: தெற்கு ரயில்வே அலட்சியம்

3 weeks ago 6

தாம்பரம்: பல ஆண்டுகளாக தாம்பரம் ரயில் நிலையத்தை மறுசீரமைப்பு செய்யாமல் தாமதப்படுத்தி வருவதால் தெற்கு ரயில்வே மீது பயணிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். தாம்பரம் ரயில் நிலையம் சென்னையின் 3வது பெரிய ரயில்வே முனையமாக உள்ளது. இருப்பினும், தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயில் பயணிகளுக்கு போதிய வசதிகள் இல்லை. சென்னை எழும்பூர் ரயில் நிலையம், கிண்டி ரயில் நிலையம் உள்ளிட்ட ரயில் நிலையங்களை மறுசீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. அந்த வகையில், தாம்பரம் ரயில் நிலையத்தின் மறு சீரமைப்பு பணிகளுக்காக 2020ம் ஆண்டு டெண்டர் விடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தை தனியார் நிறுவனம் ஒன்று எடுத்தது. ஆனால், தாம்பரம் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள் நடைபெறாமல் உள்ளது.

தாம்பரம் ரயில் நிலையத்தை சீரமைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம், பயணிகளை ஏமாற்றமடையச் செய்துள்ளது. மதுரை மற்றும் தென் மாவட்டங்களுக்கு நீண்ட தூரம் செல்லும் ரயில்கள் வந்து நிற்கும் நடைமேடைகளில் மேற்கூரை இல்லை. எனவே, பயணிகள் ரயில்களுக்காக காத்திருக்கும்போது கொளுத்தும் வெயிலில் நிற்க வேண்டும் அல்லது மழையில் நனைய வேண்டும்.

ஆண்டுதோறும் 7.5 கோடி பயணிகளுக்கு சேவை செய்து, 2023-24ல் ரூ.246.7 கோடி வருவாய் ஈட்டிய போதிலும் தாம்பரம் ஸ்டேஷனில் எல்இடி காட்சி பலகைகள், லிப்ட்கள், எஸ்கலேட்டர்கள், சாய்வு தளங்கள், குளிரூட்டப்பட்ட காத்திருப்பு கூடங்கள் மற்றும் 5- 10 நடைமேடைகளில் மேம்படுத்தப்பட்ட ஓய்வறைகள் போன்ற எந்த அடிப்படை வசதிகளும் இதுவரை செய்யப்படவில்லை. அடிக்கடி பழுதடையும் ஃபுட் ஓவர்பிரிட்ஜில் உள்ள சிறிய எல்சிடி ஸ்கிரீன்கள்தான் பயணிகளின் தகவல்களுக்கு ஆதாரமாக உள்ளது.

குறிப்பாக, மறுசீரமைப்பு திட்டத்தில் ரயில்வே பணிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அது மந்தகதியிலேயே இருந்தது. மறுசீரமைப்பு திட்டம் 4 ஆண்டுகள் 4 மாதங்களுக்கும் மேலாக தேக்க நிலையில் உள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக ஆகஸ்ட் 2020ல் ரூ.43.46 லட்சம் ஒதுக்கப்பட்ட நிலையில், 8.38 லட்சம் (19.3%) மட்டுமே செலவிடப்பட்டது. ஆனாலும், தொடர்ந்து தாமதமாகவே இருந்து வருகிறது.
இதுகுறித்து தொடர்ந்து விமர்சனம் எழுந்த நிலையில், ஜூலை 2024ல் தாம்பரம் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிக்கான விரிவான திட்ட அறிக்கை 10 நாட்களுக்குள் சமர்ப்பிக்கப்படும் என்றும், கட்டுமான அனுமதி அக்டோபரில் எதிர்பார்க்கப்படும் என்றும், ஜூன் 2025ல் பணிகள் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கையில், ‘1,000 கோடி ரூபாய் மதிப்பில், தாம்பரம் ரயில் நிலையத்தின் 6 நடைமேடைகளையும் இணைத்து, டெர்மினல் கட்டிடம் கட்டப்பட உள்ளது. அதில் ஓய்வறை, கழிவறை, உணவகம், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தள நடைபாதை உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன. விரைவில் அதற்கான பணிகள் நடைபெறும் என தெரிவித்தனர். இந்நிலையில், தொடர்ந்து பல ஆண்டுகளாக தாம்பரம் ரயில் நிலையம் மறுசீரமைக்கப்படாமல் உள்ளதால் ரயில் பயணிகள் மிகுந்த வேதனை அடைவதாக தெரிவித்துள்ளனர்.

நடந்ததும்… நடக்காததும்…
* 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரூ.43,46,000 மதிப்பில் தனியார் நிறுவனத்திடம் மாஸ்டர் பிளான் மற்றும் திட்ட அறிக்கை தயாரிக்க 6 மாதங்கள் அவகாசம் தரப்பட்டது.
* 2021ம் ஆண்டு ஜூனில் ரூ.8.38 லட்சம் (19.3%) மட்டுமே செலவிடப்பட்டதாக அந்த நிறுவனம் அறிக்கை சமர்ப்பித்தது.
* 2022ம் ஆண்டு தனியார் மற்றும் பொதுத்துறை மூலம் அமைக்க ஒப்புதல் தரப்பட்டது.
* 2023ம் ஆண்டு ஜன. 31ல் தாம்பரம் ரயில் நிலையம் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் சீரமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
* 2024ம் ஆண்டு ஜூன் 12ல் தனியார் நிறுவனம் ஒன்று தாம்பரம் ரயில் நிலையத்தை சீரமைக்க ரூ.1000 கோடி ஒப்பந்தம் போட்டது.
டிசம்பரில் தாம்பரம் ரயில் நிலைய சீரமைப்பு பணிகளின் விவரங்களை கேட்டபோது ஒரு வேலையும் நடைபெறவில்லை என தெரிவித்துள்ளது.

The post டெண்டர் விடப்பட்டு 4 ஆண்டுகளாகியும் தாம்பரம் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி தாமதம்: தெற்கு ரயில்வே அலட்சியம் appeared first on Dinakaran.

Read Entire Article