
அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், யோகிபாபு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'டூரிஸ்ட் பேமிலி'. கடந்த 1-ந்தேதி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
ஆருயிர் இளவல் யுவராஜ் அவர்களின் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் எம்.ஆர்.பி. எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவன தயாரிப்பில், அன்பு இளவல் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், தம்பி சசிகுமார், சிம்ரன், அண்ணன் எம்.எஸ்.பாஸ்கர், தம்பி யோகிபாபு உள்ளிட்டவர்களின் நடிப்பில் வெளியாகியுள்ள டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தைச் சிறப்புத்திரைக்காட்சியில் கண்டேன் என்று சொல்வதை விட மனித மனதின் மெல்லிய உணர்வுகளைத் தூண்டும் ஒரு திரைக்காவியத்தைக் கண்டு களித்தேன் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.
அந்த அளவிற்கு தமிழில் இதுவரை வெளிவந்த எந்த திரைப்படத்தின் சாயலோ, தாக்கமோ, உரையாடலோ, காட்சியமைப்போ, கதாபாத்திர தேர்வோ எதுவுமில்லாமல், பிரமாண்ட அரங்குகளோ, அதிரடி சண்டைக்காட்சிகளோ, ஆர்ப்பாட்டமான இசையோ இல்லாமல், புத்தம்புதிய திரைக்கதை, ஆகச்சிறந்த திரைக்களம், அதற்கேற்ற பாத்திர படைப்பு என தரமான கலைப்படைப்பாக வெளிவந்துள்ளது டூரிஸ்ட் பேமிலி திரைப்படம்!
குட் நைட், லவ்வர் திரைப்படங்கள் வரிசையில் மூன்றாவதாக இப்படி ஒரு திரைக்காவியத்தைத் தயாரிக்க வேண்டும் என்று முடிவெடுத்து, அதனை வெற்றிப்படைப்பாக தந்துள்ள யுவராஜை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
பல திரைப்படங்களை இயக்கி, அதன்மூலம் கிடைக்கப்பெற்ற திரைக்கலை அனுபவங்களைக் கொண்டு மிகப்பெரிய இயக்குநர் படைத்தளித்த திரைப்படம் போல குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவர் மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் இயல்பான அழகியலுடன் மிக நேர்த்தியான படைப்பான டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தை 25 வயது இளம் இயக்குநர் தம்பி அபிஷன் ஜீவிந்த்தான் இயக்கியுள்ளார் என்பதை எவராலும் நம்ப முடியாது. அந்த அளவிற்கு இத்தனை இளம் வயதில் அன்புத்தம்பி அபி மிகுந்த மனமுதிர்ச்சியுடன் இத்திரைக்காவியத்தை படைத்தளித்துள்ளார். மனித உணர்வுகளை மயிலிறகால் வருடும் அவருடைய அளப்பரிய திரைக்கலைத்திறன் வியக்க வைக்கிறது. முதல் படத்திலேயே முத்திரை பதித்துள்ள தம்பி அபி அவர்களுக்கு கலையுலகில் மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது. இன்னும் பல காவியப் படைப்புகளைத் தந்து சாதனைச்சிகரங்களைத் தொட எம்முடைய வாழ்த்துகள்!
விறுவிறுப்பான காட்சியமைப்பு, இயல்பு மாறா உரையாடல்கள், பொருத்தமான நடிகர்கள் தேர்வு என படத்தின் ஒவ்வொரு பகுதியும் மிக கவனமாக கையாளப்பட்டு காட்சிகளுடன் நம்மை ஒன்றச்செய்கிறது.
'இந்தத் தமிழ் பேசுவதுதான் பிரச்சினையா, இல்லை நாங்க தமிழ் பேசுவதே பிரச்சினையா?' என்பது போன்ற படத்தின் அழுத்தமான உரையாடல்கள் ஒவ்வொன்றும் மனதை தைக்கிறது. விலைமதிப்பில்லா எதோ ஒன்றை இழந்துவிட்ட இனம்புரியா ஏக்கத்தை படம் பார்க்கும் ஒவ்வொருக்குள்ளும் இத்திரைப்படம் ஏற்படுத்துகிறது.
அயோத்தி, நந்தன், கருடன் படங்களைத் தொடர்ந்து தம்பி சசிகுமார் தம்முடைய அளப்பரிய நடிப்பாற்றலை வெளிப்படுத்தி ஏற்ற நாயகன் பாத்திரத்தைச் சிறப்பாக நடித்துள்ளார் என்று சொல்வதைவிட வாழ்ந்துள்ளார் என்றே கூற வேண்டும். ஈழத்தமிழ் மக்கள் தங்கள் புலம்பெயர் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பதற்றம், பரபரப்பு, சோகம், ஏமாற்றம், துணிவு, இரக்கம், நம்பிக்கை, புன்னகை, வெற்றி என மனித மனத்தின் அத்தனை உணர்வுகளையும் தம்முடைய முக பாவனைகள் மூலமே நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியுள்ளார்.
நம் ஈழத்தமிழ்ச் சொந்தங்களின் துயரத் துன்பங்களை எண்ணி எண்ணி 'என்று தணியுமோ எங்கள் சுதந்திர தாகம்' என்று படம் பார்க்கும்போதே உள்ளுக்குள் மனம் கதறி அழுகிறது. அந்த அளவிற்கு தம்பி சசிகுமாரின் நடிப்பு படத்தோடு நம்மை ஒன்றச்செய்கிறது.
அதே போன்று நடிகை சிம்ரன் இளமைக்காலத்தில் ஒப்பனையோடு, கவர்ச்சிகர தோற்றத்தில் எத்தனையோ படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தாலும், அவற்றிலெல்லாம் பெறமுடியாத பெயரையும், புகழையும், விருதையும் இந்த ஒற்றை திரைப்படம் அவருக்கு பெற்றுத்தரும் என உறுதியாக நம்புகிறேன். அந்த அளவிற்கு ஆகிச்சிறந்த, அதே சமயம் மிக இயல்பான நடிப்பாற்றலை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனங்களை வென்றுள்ளார்.
படம் முழுக்க வலம் வரும் தம்பி யோகிபாபு வழக்கம்போல தம்முடைய நகைச்சுவை ஆற்றலால் நம்மை வெடித்து சிரிக்க வைக்கிறார். அண்ணன் எம்.எஸ்.பாஸ்கர் தம்முடைய முதிர்ச்சியான நடிப்பின் மூலம் ஏற்ற பாத்திரத்திற்கு உயிர் தந்துள்ளார். அவரைப்போலவே படத்தில் வருகின்ற இளங்கோ குமரவேல், பகவதி பெருமாள், ரமேஷ் திலக், ஸ்ரீஜா ரவி, யோகலட்சுமி, ராம்குமார், பிரசன்னா, பிள்ளைகள் மிதுன் மற்றும் கமலேஷ் உட்பட அனைவருமே நம்மை இருக்கையோடு கட்டிப்போடும் அளவிற்கு கதை மாந்தர்களாகவே வாழ்ந்துள்ளார்கள்.
தம்பி ஷான் ரோல்டனின் பாடல்களும், பின்னணி இசையும் தென்றல் தீண்டுவதுபோல நம் மனதை வருடுகிறது. தம்பி அரவிந்த் விஸ்வநாதனின் துல்லியமான ஒளிப்பதிவும், தம்பி பரத் விக்ரமனின் சிறப்பான படத்தொகுப்பும், காட்சிகள் ஒவ்வொன்றையும் அழகுறச் செய்த தம்பி ராஜ் கமலின் கலை இயக்கமும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.
இத்திரைப்படத்தில் நடித்துள்ள அனைத்து திரைக்கலைஞர்கள் மற்றும் சிறப்புற பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பும், பாராட்டுகளும்!
ஒரு சிறுகதை தொடங்கி முடிவதைப்போல திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் தொடங்கி முடிய வேண்டும் என்று எழுத்தாளர் ஐயா சுஜாதா கூறுவதைப்போல இத்திரைப்டத்தின் ஒவ்வொரு காட்சியும் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டு மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. மனித உறவுகளை, மன உணர்வுகளை அழகுற வெளிப்படுத்தும் படத்தின் அழகியல் நம்மை வியந்து ரசிக்க வைக்கிறது .
வெற்றிப்படைப்பாக வெளிவந்துள்ள டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தை உலகத்தமிழ்ச் சொந்தங்கள் திரையரங்களில் சென்று கண்டுகளித்து பேராதரவு நல்குவதன் மூலம் மட்டுமே, இதுபோன்ற ஆகச்சிறந்த கலை படைப்புகள் அதிகளவில் தமிழ்த்திரையில் வெளிவந்திட வாய்ப்பினை ஏற்படுத்தும்.
வணிகச்சூழலை மட்டுமே கருத்திற்கொள்ளாது, அதற்காக எவ்வித சமரசமும் செய்துகொள்ளாது, நல்ல திரைக்கதையின் மூலம் மட்டுமே மக்கள் மனங்களை வென்று, வெற்றிப்படைப்பை அளிக்க முடியும் என்று நிறுவியுள்ள ஆகச்சிறந்த திரைக்காவியமான டூரிஸ்ட் பேமிலி திரைப்படம், திரைமொழியில் எழுதப்பட்ட ஓர் அழகான கவிதை! அதனை நாம் அனைவரும் திரையரங்கிற்கு சென்று ஒருமுறையேனும் நேரில் வாசித்துணர வேண்டும்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.